கரோனா வைரஸ் எதிரொலி: ரூ. 14 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் தேக்கம்

கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறிக்கோழி தீவனமான மக்காச்சோளம் பயிரிட்டுள்ள
கரோனா வைரஸ் எதிரொலி: ரூ. 14 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் தேக்கம்

பல்லடம்: கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறிக்கோழி தீவனமான மக்காச்சோளம் பயிரிட்டுள்ள 30,000 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் கறிக்கோழி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் கோழிப் பண்ணைகள் உள்ளன. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகள் உள்ளன. தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
 கோழிப் பண்ணைகளில் 45 நாள்கள் வளர்க்கப்படும் கறிக்கோழிகளுக்கு மக்காச்சோளம், சோயா, சில்வர் மத்திகருவாடு உள்ளிட்டவையுடன் கூடிய சத்தான தீவனம் வழங்கப்பட்டு நல்ல பராமரிப்புடன் வளர்க்கப்படுகின்றன. கறிக்கோழி விற்பனை நிலவரத்தைப் பொருத்து பல்லடத்தில் இயங்கி வரும் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து தினமும் அறிவிக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகம், பிற மாநிலங்களில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
 கடந்த சில நாள்களாக கேரளத்தில் பறவைக் காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்பு போன்ற காரணங்களால் கோழி இறைச்சி விற்பனை குறைந்தது. அதனால் ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்ய ரூ.78 வரை செலவாகும் நிலையில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.27 ஆக உள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்கள் வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
 தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் ரூ.14 கோடி மதிப்புள்ள 1 கோடி கிலோ கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் சுமார் 6 கோடி பேர் கோழி இறைச்சியை விரும்பி உட்கொண்டு வந்தனர். தற்போது கரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி நுகர்வு மொத்தமாக பாதிப்படைந்துள்ளது. கோழி தீவனத்துக்கு மூலப்பொருள்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) செயலாளர் சுவாதி கண்ணன் (எ) சின்னசாமி கூறியதாவது:
 தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழிலாக கோழிப்பண்ணை விளங்குகிறது. தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் பண்ணைகளிலும், விற்பனைக்கு கொண்டு செல்லும்போதும் 10 சதவீத கோழிகள் இறந்து விடுகின்றன.
 ஒரு கறிக்கோழி 2 கிலோ எடை இருக்கும். தினமும் 18 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு கோழிக்கு ரூ.70 வரை தீவன செலவு ஆகிறது. தற்போது கேரளம், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல், கரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி நுகர்வு வெகுவாக குறைந்து கோழிப்பண்ணைத் தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
 கோழிப் பண்ணையாளர்களையும் கோழிப் பண்ணை உற்பத்தி தொழிலையும் மத்திய, மாநில அரசுகள்தான் பாதுகாக்க வேண்டும். வங்கியில் கோழிப் பண்ணையாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். பெரும் நஷ்டமடைந்த கோழிப் பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பு ஆண்டு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் அரசுக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பருப்பு, உடைந்த கோதுமை, பழுப்பு நிற அரிசி உள்ளிட்ட தானியங்களை சலுகை விலையில் கோழிப் பண்ணைகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.
 மக்காச்சோள விவசாயிகளும் பாதிப்பு:
 திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 70,000 ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
 இந்நிலையில் கறிக்கோழிகளின் விலை வீழ்ச்சி காரணமாக கோழிப் பண்ணை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளும் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த மாதம் ஒரு குவின்டால் (100 கிலோ மூட்டை) மக்காச்சோளம் ரூ. 2,700 முதல் ரூ. 2,800 வரையில் விற்பனையானது. கரோனா, பறவைக் காய்ச்சல் பீதியால் விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு குவின்டால் ரூ. 1,350 முதல் ரூ. 1,400 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
 ஒரு ஏக்கரில் சராசரியாக 25 குவின்டால் மக்காச்சோளம் விளைச்சல் கிடைக்கும். இதற்கு மருந்துடன் சேர்த்து சுமார் ரூ. 60,000 செலவாகிறது. ஆனால் தற்போது விலை சரிவு காரணமாக விவசாயிக்கு ஏக்கருக்கு சுமார் ரூ. 40,000 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட பெரும்பாலான விவசாயிகள் 40 சதவீதம் விளைச்சலை இருப்பு வைத்துள்ளனர். நெல்லைப் போன்று மக்காச்சோளத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன் கூறியதாவது:
 கோழிப்பண்ணைத் தொழிலைக் காப்பதற்கு கரோனா, பறவைக் காய்ச்சல் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கறிக்கோழிகளில் இருந்து கரோனா பரவாது என்ற விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 அரசே கொள்முதல் செய்ய வேண்டும்:


 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருப்பூர் மாவட்டத் தலைவருமான எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதாவது:
 தற்போது கரோனா வைரஸ் பீதியால் ஒரு குவின்டால் ரூ. 1,400க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாட்டுத் தீவனங்களின் விலை குறையவில்லை. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் 60 சதவீதத்தை விவசாயிகள் தற்போது விற்பனை செய்துவிட்டனர். ஆனால் மீதமுள்ள 40 சதவீத மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்காததால் இருப்பு வைத்துள்ளனர். இந்த மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
 - ஏ. குணசேகரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com