21 ஆண்டுகளுக்குப் பிறகு டானிக் பெற்ற பார்மா!

பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் என்பது இயல்புதான். ஆனால், கரோனா தொற்று பரவலின் தாக்கம் உலகளாவிய அளவில் பொருளாதாரம்,
21 ஆண்டுகளுக்குப் பிறகு டானிக் பெற்ற பார்மா!
Updated on
2 min read

பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் என்பது இயல்புதான். ஆனால், கரோனா தொற்று பரவலின் தாக்கம் உலகளாவிய அளவில் பொருளாதாரம், தொழில்துறை, மக்களின் இயல்பு வாழ்க்கை, பங்குச் சந்தை, நிதிச் சந்தை என அனைத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகளாகத் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பார்மா நிறுவனப் பங்குகள், தற்போது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளன. இதனால்,  மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரலில்  மிகப் பெரிய லாபத்தைப் பதிவு செய்ய வாய்ப்பாக அமைந்தது.

 கரோனா தொற்று நோயை எதிர்கொள்ள தடுப்பூசி உருவாக்குவது தொடர்பாக வரும் நேர்மறை செய்திகள், இடர்பாடான காலங்களில்  பாதுகாப்பான முதலீட்டுக்கான விருப்பம் ஆகிய காரணங்களால் பார்மா நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு தற்போது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இக்கட்டான இந்த நேரத்தில் பார்மா பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்றுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஏப்ரலில் மட்டும் பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், நிஃப்டி பார்மா குறியீடு 31 சதவீதம்  உயர்ந்துள்ளன. இந்தக் குறியீடு பட்டியலில்   இடம் பெற்றுள்ள 10 முன்னணி நிறுவனப் பங்குகளில் பிராமல் என்டர்பிரைஸஸ் லிமிடெட் (பிஇஎல்) பங்கு  மட்டும்தான் ஏப்ரலில் 1.61 சதவீதம்  உயர்ந்தது.  சன் பார்மா, சிப்லா, லூபின், அரவிந்தோ பார்மா மற்றும் கிளென்மார்க், கெடில்லா, பயோகான், டிவிஸ் லேப் உள்ளிட்டவை 20 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதுவே பார்மா குறியீடு வலுவான எழுச்சியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆனால், இதே காலகட்டத்தில்  சென்செக்ஸ் 11 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதில் நிஃப்டி பார்மா குறியீடு, 2001 ஜனவரிக்குப் பிறகு மிகப் பெரிய மாதாந்திர எழுச்சியை இப்போது பதிவு செய்துள்ளது. அதே போல பிஎஸ்இ ஹெல்த்கேர்  குறியீடு கடைசியாக இதேபோன்ற  எழுச்சியை கடந்த 1999, மார்ச்சில் கண்டிருந்தது. அப்போது பார்மா குறியீடு ஒரே மாதத்தில் 31.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில், 2020 நிதியாண்டில் ஜனவரி - மார்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் உள்நாட்டு சந்தையில் மருந்துகள் மற்றும் பிற சுகாதாரப் பொருள்கள் வாங்குவது அதிகரித்துள்ளன.  மேலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ஒசெல்டமிவிர் போன்ற மருந்துகளுக்கான சர்வதேச ஆர்டர்களும் (மார்ச்சில் மட்டும்) அதிகரித்துள்ளன. இவை பார்மா  நிறுவனங்கள் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பெற உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான பிற அத்தியாவசிய மருந்துகள், சுவாசப் பிரச்னை மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் தேவையும்   அதிகரித்துள்ளன. இதுவும்  பார்மா நிறுவனங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இது குறித்து பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் கூறுகையில், "பெரும்பாலான இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இது  அந்த நிறுவனங்களின் லாப வளர்ச்சி விகிதம் உயர்வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது' என்கின்றன.

ஆனால், சிக்கலான புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகளில் இந்திய நிறுவனங்கள் குறைவாகவே ஈடுபடுகின்றன என்றும், இந்த வகையில் உலகளாவிய நிறுவனங்கள்அனுபவம் மற்றும் புதுமைகளின் அடிப்படையில் கூடுதல் சக்தியைப் பெற்றுள்ளன.  

இருப்பினும், மருந்து தயாரிப்புகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதில் நிலவும் சிரமங்கள், நிலையற்ற வருவாய் மற்றும் உள்நாட்டு சந்தை விலை ஒழுங்குமுறை ஆகியவற்றால் இந்தத் துறை வருவாய் வளர்ச்சியுடன் போராடுவதாக ஆய்வாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.

 கரோனா தொற்றுப் பரவல் உள்ள இச்சூழ்நிலையில்,  காத்திருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களின்  பல ஆலைகள் செயல்படுவதற்கான அனுமதியை அடுத்த 12-18 மாதங்களில் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2022 நிதியாண்டின் மத்தியில் பெரும்பாலான ஆலைகள் அனுமதியை பெற்றுவிடும் என்ற அடிப்படையில் எதிர்பார்ப்பு நிகர லாபம் மதிப்பிடப்பட்டுள்ளது என்று பார்மா நிறுவனங்களைக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்மா பங்குகள் சோபிக்க முடியாமல் முதலீட்டாளர்களுக்கு தூங்காத இரவுகளை அளித்து வந்தன. 
இந்நிலையில், கரோனாவால்  உலகமே கடும் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளது. ஆனால், அதே கரோனா பார்மா நிறுவனங்களுக்கு புதிய டானிக்கை கொடுத்துள்ளது என்பதே உண்மை.

உற்சாகம் பெற்ற பங்குகள் %
கிளன்மார்க் 60
அரவிந்தோ 51
லூபின் 45
சிப்லா 41
சன்பார்மா 36
பயோகான் 30
டாக்டர் ரெட்டி 25
கெடில்லா 22
டிவிஸ் லேப் 20
பிஇஎல் 02


அடுத்த எழுச்சிக்குத் தயார்..!
பங்குச் சந்தையின் அடுத்த  கட்ட எழுச்சியில் பார்மா மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் முன்னிலை பெறும் என  முதலீட்டு வங்கியான  மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. இந்த இரண்டு துறைப் பங்குகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச் சந்தை எழுச்சியில் பங்கேற்காமல் இருந்தன. இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச் சந்தை எழுச்சியில் பங்கேற்ற நிதி, நுகர்பொருள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்து வரும் எழுச்சியில்  பார்மா முன்னிலை பெறும் என்று  மோர்கன்  ஸ்டான்லி தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் கவனப் பட்டியலில் உள்ள 20 பங்குகளில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர், எச்.டி.எஃப்.சி., எம்.சி.எக்ஸ் ஆகியவற்றை நீக்கி விட்டு புதிதாக சன் பார்மா, அப்போலோ ஹாஸ்பிடல், லூபின் ஆகியவற்றை இடம்பெறச் செய்துள்ளது இதை உறுதி செய்வது போல உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com