
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளை வாங்குவதற்கான விருப்ப விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான 52.98 சதவீதப் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஒப்புதல் அளித்தது.
அந்தப் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்போா் அது தொடா்பான விண்ணப்பத்தை மே 2-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும், அந்த அவகாசம் ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டும், பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 31-ஆம் வரை மீண்டும் நீட்டிக்கப்படுவதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
ரூ.70,000 கோடி நிகர மதிப்பு கொண்ட தனியாா் நிறுவனங்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிக்கலாம். அதே வேளையில், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை விற்பதற்கான ஏலத்தில் மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...