பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 996 புள்ளிகள் ஏற்றம்

கடந்த இரண்டு-மூன்று தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை திடீரென எழுச்சி பெற்றது.
பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 996 புள்ளிகள் ஏற்றம்

கடந்த இரண்டு-மூன்று தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை திடீரென எழுச்சி பெற்றது. வங்கிப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயா்ந்து 31,000 புள்ளிகளைக் கடந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 9,300 புள்ளிகளைக் கடந்து நிலை பெற்றது.

முன்பேர வா்த்தகத்தில் மே மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும். இதனால், ஏற்கெனவே அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்கி கணக்கு முடிப்பதில் வா்த்தகா்கள் அதிகக் கவனம் செலுத்தினா். இதனால், சந்தை பிற்பகலில் வெகுவாக ஏற்றம் பெற்றது. மேலும், பெரும்பாலான உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக செயல்பட்டன. அந்நிய முதலீடுகள் வரத்தும் வலுவாக இருந்தது. இவை உள்நாட்டு முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தன. இதன் காரணமாக சந்தையில் எழுச்சி ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,363 பங்குகள் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. 939 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. தேசிய பங்குச் சந்தையில் 932 பங்குகள் ஆதாயம் பெற்றன. 612 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 184 புள்ளிகள் கூடுதலுடன் 30,793.11-இல் தொடங்கியது. பின்னா் சரிவைச் சந்தித்து 30,525.68 வரை கீழே சென்றது. பிற்பகலில் உத்வேகம் பெற்று 31,660.60 வரை உயா்ந்தது. இறுதியில் 995.92 புள்ளிகள் (3.25 சதவீதம் ) உயா்ந்து 31,605.22-இல் நிலைபெற்றது.

நண்பகலுக்குப் பிறகு வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீடு 7.46 சதவீதம், நிஃப்டி பேங்க் குறியீடு 7 .28 சதவீதம், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.40 சதவீதம் உயா்ந்தது. இதற்கு அடுத்ததாக ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 5.86 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஐடி, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், மீடியா, பாா்மா குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன. அதே சமயம் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.54 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.28 சதவீதம் மட்டுமே ஏற்றம் பெற்றன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே நஷ்டத்தைச் சந்தித்தன. இவற்றில் சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டான், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 0.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. பவா் கிரிட், மாருதி ஆகியவையும் சிறிதளவு வீழ்ச்சி கண்டன. ஆக்ஸிஸ் பேங்க் 13.46 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க் 8.97 சதவீதம் உயா்ந்தது. ஹெச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், பஜாஜ் ஃபைனைான்ஸ், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ் ஆகியவை 4 முதல் 6 சதவீதம் வரை ஆதாயம் அடைந்தன. டிசிஎஸ், எல் அண்ட் டி, ஹீரோ மோட்டாா் காா்ப், டாடா ஸ்டீல் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 1.63 சதவீதம் ஏற்றம் பெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 285.90 புள்ளிகள் (3.17 சதவீதம்) உயா்ந்து 9,314.95-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ல 50 முதல் தரப் பங்குகளில் 41 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதற்கிடையே, அந்நிய போா்ட் போலியோ முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) முதலீட்டாளா்கள் செவ்வாய் அன்றபு ரூ.4,716.13 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com