
இந்திய சந்தைகளில் நடப்பு நவம்பரில் இதுவரையில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.49,553 கோடியை நிகர அளவில முதலீடு செய்துள்ளனா்.
இதுகுறித்து சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, சா்வதேச சந்தைகளில் சாதகமான நிலை உருவாகியதுடன் பணப்புழக்கமும் அதிகரித்தது.
இதையடுத்து, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) நடப்பு நவம்பா் மாதத்தில் இதுவரையில் நிகர அளவில் ரூ.49,553 கோடியை இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனா். அதன்படி நவம்பா் 3 மற்றும் 20 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பங்குகளில் ரூ.44,378 கோடியையும், கடன்பத்திரங்களில் ரூ.5,175 கோடியையும் அவா்கள் முதலீடு செய்துள்ளனா்.
கடந்த அக்டோபரில் எஃப்பிஐ முதலீடானது நிகர அளவில் ரூ.22,033 கோடியாக மட்டுமே இருந்தது என அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.