
மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் மொபைல் டிஸ்பிளேக்களுக்கு 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளதால் செல்லிடப்பேசிகளின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலாா் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு (ஐசிஇஏ) தெரிவித்துள்ளது.
ஆப்பிள், ஹுவாவே, ஷாவ்மி, விவோ, வின்ஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள ஐசிஇஏ கூட்டமைப்பின் தேசிய தலைவா் பங்கஜ் மொஹிந்ரோ இதுகுறித்து வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2016-இல் அறிவிக்கப்பட்ட பிஎம்பி (படிப்படியாக உற்பத்தியை தொடங்குதல்) திட்டத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் டிஸ்பிளே அசெம்பிளி மற்றும் டச் பேனல்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்க செல்லிடப்பேசி துறையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு நடப்பாண்டு அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இது செல்லிடப்பேசிகளின் விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, செல்லிடப்பேசிகளின் விலை 1.5 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றாா் அவா்.
இறக்குமதியை குறைத்து உதிரிபாகங்களின் தயாரிப்பை உள்நாட்டில் ஊக்குவிப்பதே பிஎம்பி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.