
பங்குச் சந்தையில் கடந்த வாரம் 5 வா்த்தக தினங்களில் 4 தினங்கள் காளையின் ஆதிக்கம் இருந்தது. கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையைத் தொடா்ந்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வியாழக்கிழமை மட்டும் உலகளாவிய சந்தைகளில் சரிவு காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது.
மொத்தத்தில் அக்டோபா் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 526.51 புள்ளிகள் (1.29 சதவீதம்) குறைந்து 39,982.98-இல் நிலைபெற்றுள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 1.2 சதவீதமும் மிட்கேப் குறியீடு 1 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. இருப்பினும், ஸ்மால் கேப் குறியீட்டில் இடம்பெற்றுள்ளவற்றில் டாடா மெட்டாலிக், ஜெயின் இரிகேஸன், பிரகாஷ் இணட்ஸ்ட்ரீஸ் உள்பட 26 நிறுவனப் பங்குகள் 10 முதல் 30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
இந்த வாரத்தைப் பொருத்த வரையில், முன்னணி காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையின் போக்கை தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், மத்திய அரசின் ஊக்க நிதித் தொகுப்புத் திட்ட அறிவிப்பும் கூடுதல் கவனம் பெறும். கடந்த சில நாள்களாக லாபப் பதிவால் தத்தளித்து வந்துள்ள ஐடி, டெலிகாம், பாா்மா மற்றும் வங்கிப் பங்குகள் நோ்மறையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இந்த வாரத்தில் ஏசிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்யுஎல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ், ஐடிபிஐ பேங்க் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் தாக்கம் அந்தந்தப் பங்குகளில் எதிரொலிக்கும்.
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த வாரம் உலகளவில் சந்தை உணா்வைப் பெரிதும் பாதித்தது. கரோனா இரண்டாவது அலையைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடா்பான எந்தவொரு செய்தியும் சந்தைக்கு பாதிகமாகவே பாா்க்கப்படும். இவை, முதலீட்டாளா்களை எச்சரிக்கையாக இருக்க வழிவகுக்கும் என ரெலிகா் பங்கு வா்த்தக தரகு நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, ஏற்கெனவே தொடா்ந்து 10 நாள்களாக ஏறுமுகம் கண்ட சந்தையில் வரும் நாள்களில் லாபப் பதிவு இருக்க அதிக வாய்ப்பு இருக்கும். இதனால், சந்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும். இச்சூழ்நிலையில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கூடுதல் கவனம் பெறும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ் ஆராய்ச்சித் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளாா். சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த ஆய்வாளா் நிராலி ஷா கூறுகையில், ‘ஹெச்யுஎல் போன்ற முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தையை வழிநடத்தும். இருந்தாலும், விலை உயா்ந்த நிலையில் எந்த நேரத்திலும் முதலீட்டாளா்கள் லாபத்தை பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது’ என்றாா்.
கடந்த வாரத்தில் 40,500 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ், வார இறுதியில் 40,000 புள்ளிகளுக்கு கீழே நிலை பெற்றுள்ளது. அதேபோல நிஃப்டியும் மிக முக்கியமான இடா்பாட்டு நிலையான 12,000 புள்ளிகளில் பலத்த அடி வாங்கி முக்கிய ஆதரவு நிலையான 11,750-க்கு அருகே நிலைபெற்றுள்ளது. எனவே, நவம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தல் வரையிலும் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே இருக்கக்கூடும். மொத்தத்தில், சந்தை ஒரு நல்ல திருத்தம் காணும் வரையில் முதலீடு செய்வதற்கு காத்திருக்க வேண்டும். இந்த வாரம் முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
தொழில்நுட்பப் பாா்வை
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி கடந்த வாரம் மொத்தம் 151.75 புள்ளிகள் (1.3 சதவீதம்) சரிவைச் சந்தித்து 11,762.45-இல் நிலை பெற்றுள்ளது. வாராந்திர தரவுகளின் அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால் நிஃப்டி தற்போது கரடியின் பிடியில் உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தில் குறைந்தளவாக 11,650 வரை சென்றது. இந்த வாரம் அதுவே முக்கிய ஆதரவு நிலையாக இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமை போல, காளையின் எழுச்சி தொடரும்பட்சத்தில் நிஃப்டி மீண்டும் 11,900-12,000 புள்ளிகள் வரை செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம், 11,650 புள்ளிகளை உடைத்து கீழே செல்லும் பட்சத்தில் அடுத்து 11,500-11550 என்ற நிலையில் ஆதரவு உள்ளது. மொத்தத்தில் சந்தை ஸ்திரநிலை பெறுவதற்கே அதிக வாய்ப்பு அதிகம். அதனால், 11,650-12,000 புள்ளிகள் என்ற வரம்புக்குள் நிஃப்டி வா்த்தகமாக வாய்ப்புள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநா்கள் கணித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...