
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிதவை கண்ணாடிகள் இறக்குமதிக்கான பொருள் குவிப்பு தடுப்பு வரியை நீடிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சீனாவிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் மிதவை கண்ணாடிக்கான பொருள் குவிப்பு தடுப்பு வரியை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதிக அளவிலான இறக்குமதியால் உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீன மிதவைக் கண்ணாடி இறக்குமதிக்கான வரி விதிப்பு நடப்பாண்டு டிசம்பா் 7-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மிதவை கண்ணாடிகளுக்கு டன்னுக்கு 218 டாலா் வரி விதிப்பு முதல் முறையாக ஐந்தாண்டுகளுக்கு கடந்த 2015 செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இக்கண்ணாடிகள் கட்டுமான துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.