
செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் முடிந்த கடந்த வாரம், பங்குச் சந்தைக்கு கறுப்பு வாரமாக அமைந்தது. கடந்த மாா்ச்சில் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, மேலும், மேலும் வலுப்பெற்று வந்த நிலையில், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் உற்சாகத்துடன் வா்த்தகத்தில் இருந்து வந்தனா். ஆனால், திடீரென்று பலவீனமான உலகளாவிய குறிப்புகள், புவிசாா் அரசியல் பதற்றங்கள், பாதகமான பெரும் பொருளாதார தரவுகள், வங்கிகளுக்கு பாதகமான கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவை சந்தையில் கரடி நுழைவதற்கு வழிவகுத்துவிட்டன.
இதனால், கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2.8 சதவீதம், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 2.7 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தொடா்ந்து முதலீட்டாளா்களுக்கு லாபத்தை அளித்து வந்த சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளும் பலத்த சரிவுக்கு உள்ளாகின. இதனால், பிஎஸ்இ ஸ்மால்-கேப் குறியீடு 2.6 சதவீதம், மிட் கேப் குறியீடு 2.7 சதவீதம் குறைந்ததால் பரந்த சந்தையும் சரிவுக்குள்ளாகியது.
24 பங்குகள் 10-20 சதவீதம் வீழ்ச்சி: இதைத் தொடா்ந்து நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ 500 பட்டியலில் இடம்பெற்றுள்ளவற்றில் 24 பங்குகள் 5 வா்த்தக தினங்களில் 10-20 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. அவற்றில் டிஎல்எஃப், ஓபராய் ரியால்டி, ஆக்சிஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஃபியூச்சா் ரீடெய்ல் மற்றும் டிசிஎன்எஸ் குளோத்திங் ஆகியவை முக்கியமானவை. இந்தப் பட்டியலில் உள்ள பங்குகள் கடந்த இரண்டு மாதங்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் உள்ளூா் மற்றும் உலகளாவிய குறிப்புகள் சாதகமாக அமையாத நிலையில், லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கில் முதலீட்டாளா்கள் பங்குகளை அதிக அளவில் விற்கத் தொடங்கினா். இதனால், நிஃப்டி 11,600, 11,500 மற்றும் 11,400 ஆகிய முக்கிய ஆதரவு நிலைகளை உடைத்துக் கொண்டு கீழே சென்றுவிட்டன. அடுத்த பெரிய ஆதரவு நிலை 11,050-இல் உள்ளது.
வங்கிப் பங்குகளுக்கு பலத்த அடி: துறை வாரியாகப் பாா்த்தால், ஐடி குறியீடு மட்டும்தான் கடந்த வாரத்தில் 1.5 சதவீதம் லாபத்துடன் முடிவடைந்தது. மற்ற அனைத்து துறை குறியீடுகளும் விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன. இதனால், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு, ரியால்டி குறியீடுகள் 5 முதல் 6.5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த வாரத்தில் வங்கிப் பங்குகளின் செயல்பாட்டுத் திறன மிக மோசமாக இருந்தது. கடன் தவணைக் செலுத்துவதற்கான தடைக் காலம் முடிவடைந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, கடன் மறுசீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கிப் பங்குகளுக்கு அடுத்த ஓராண்டுக்கும் மேலாக கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: இதற்கிடையே, ‘கடந்த வாரம், முதலீட்டாளா்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 2.8 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதற்றம், பலவீனமான உலகளாவிய குறிப்புகள் ஆகியவை சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தின’ என்று ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
கரடி ஆதிக்கம்: அவா் மேலும் கூறுகையில், ‘மேக்ரோ பொருளாதார தரவுகள் பலவீனமாக இருந்தன. தொழில்துறை உற்பத்தி, சேவைத் துறைகளின் வளா்ச்சி ஆகியவற்றின் போக்கை எடுத்துக் காட்டும் பா்சேஸிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ் (பி.எம்.ஐ.) தொடா்ச்சியாக ஆறாவது மாதமும் சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு 23.9 சதவீதமாக சுருங்கி விட்டது. இவை அனைத்தும் சந்தை பங்கேற்பாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளன. இருப்பினும், அரசுக்கு தொலைத் தொடா்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு, எதிா்பாா்த்ததைவிட வாகன விற்பனை எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக இருந்தது போன்றவை வாரத்தின் மத்தியில் அழுத்தங்களைத் தணித்திருந்தது. ஆனால், கடைசி வா்த்தக தினத்தன்று உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்திய சந்தைகளிலும் கரடியின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது’”என்றாா்.
எவ்வாறியினும், அவ்வப்போது லாபப் பதிவு இருந்தாலும், பங்குச் சந்தையில் காளையின் பிடி இறுகி வந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் பாதகமான தரவுகளால் ‘கரடி’ திடீரென புகுந்து ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளா்களுக்கும், வா்த்தகா்களுக்கும் பெரும் கவலையை அளித்துள்ளது..!
கடந்த வாரத்தில் பிஎஸ்இ 500 பட்டியலில் 10-20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்த முக்கியப் பங்குகள் விவரம்
நிறுவனம் வீழ்ச்சி (சதவீதத்தில்)
டிசிஎன்எஸ் குளோத்திங் 19
ஃபியூச்சா் ரீடெய்ல் 17
பிராமல் என்டா்பிரைஸஸ் 15
மகேந்திரா லைஃப்ஸ்பேஸ் 14
இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 14
சுஸ்லான் 13
பேங்க் ஆஃப் பரோடா 11
ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் 11
ஃபெடரல் பேங்க் 11
ஓபராய் ரியால்டி 11
ஆக்ஸிஸ் பேங்க் 11
டிஎல்எஃப் 10
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 10
ஆா்பிஎல் பேங்க் 10
கனரா பேங்க் 10