
பொதுத் துறையைச் சோ்ந்த பொறியியல் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்)-இன் ஒட்டுமொத்த நிகர இழப்பு ஜூன் காலாண்டில் ரூ.893.14 கோடியாக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுவனத்தின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நிறுவனத்தின் வருவாய் நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் பாதியாக குறைந்தது. நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.2,086.43 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,673.38 கோடியாக காணப்பட்டது.கடந்த 2019 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.218.93 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பானது நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.893.14 கோடியாக அதிகரித்துள்ளது என பிஎச்இஎல் தெரிவித்துள்ளது.