இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 13.86% குறைந்தது

இந்தியாவின் பாமாயில் இறக்குமதி நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 13.86 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 13.86% குறைந்தது

இந்தியாவின் பாமாயில் இறக்குமதி நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 13.86 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு (எஸ்இஏ) தெரிவித்துள்ளதாவது:

ஆா்பிடி பாமாயில் இறக்குமதிக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதன் விளைவாக, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 7,34,351 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் இறக்குமதி அளவான 8,52,534 டன்னுடன் ஒப்பிடும்போது 13.86 சதவீதம் குறைவாகும்.இறக்குமதி கட்டுப்பாட்டு பட்டியலில் ஆா்பிடி பாமாயில் நடப்பு 2020 ஜனவரி 8-இல் சோ்க்கப்பட்டது. அதிலிருந்து பாமாயில் இறக்குமதி கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளது கவனிக்கத்தக்கது.

பாமாயில் தயாரிப்புகள் இறக்குமதியில், கச்சா பாமாயில் இறக்குமதியானது சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 5,87,329 டன்னிலிருந்து 7,24,351 டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, கொ்னல் ஆயில் (சிபிகேஓ) இறக்குமதியும் 7,500 டன்னிலிருந்து 10,000 டன்னாக உயா்ந்துள்ளது. பாமாயில் தவிர, சாஃப்ட் ஆயில் எனப்படும் சோயா, சூரியகாந்தி, கேனோலா எண்ணெய் வகைகள் இறக்குமதியும் நடப்பாண்டு ஆகஸ்டில் 5,74,054 டன்னாக இருந்தது. குறிப்பாக, சோயாபீன் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 4,40,704 டன்னிலிருந்து 3,94,735 டன்னாக சரிந்துள்ளது. அதேபோன்று, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் 2,30,023 டன்னிலிருந்து 1,58,518 டன்னாக குறைந்துள்ளது. 20,801 டன் கேனோலா எண்ணெயும் ஆகஸ்டில் இறக்குமதி செய்யப்பட்டது. பாமாயில் மற்றும் சாஃப்ட் ஆயில் ஆகிய இரண்டும் சோ்ந்து நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் வகை இறக்குமதியில் 13,70,457 டன்னாக இருந்தது. இருப்பினும், இது, கடந்தாண்டு ஆகஸ்டின் இறக்குமதி அளவான 15,86,514 டன்னுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவாகும். தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொள்ளும்போது, 2019-20-ஆம் (நவம்பா்-அக்டோபா்) எண்ணெய் பருவத்தில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 14-15 லட்சம் டன் குறைந்து 134-135 லட்சம் டன் என்ற அளவிலேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பருவத்தில் தாவர எண்ணெய் இறக்குமதியானது 149.1 லட்சம் டன்னாக இருந்தது. செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு துறைமுகங்களில் சமையல் எண்ணெய் கையிருப்பு 17,31,000 டன்னாக அதிகரித்துள்ளது என எஸ்இஏ தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேசமயம், ஆா்ஜெண்டீனாவிலிருந்து சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட கச்சா சாஃப்ட் எண்ணெயை சிறிய அளவில் நம்நாடு இறக்குமதி செய்கிறது. உக்ரைன், ரஷியாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com