உள்நாட்டில் கடும் விலையேற்றம் இரும்பு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த கோரிக்கை

இந்த கரோனா பொதுமுடக்க காலத்திலும், ஏற்றுமதி காரணமாக இரும்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன.
உள்நாட்டில் கடும் விலையேற்றம் இரும்பு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த கோரிக்கை
Updated on
3 min read

இந்த கரோனா பொதுமுடக்க காலத்திலும், ஏற்றுமதி காரணமாக இரும்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன. அதேசமயம் இரும்பின் அதீத விலை உயர்வால், இரும்புக் கம்பி, தகடுகளை வாங்கிப் பயன்படுத்தும் சிறு, குறு நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் தத்தளிக்கின்றன.
 எனவே ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டில் இரும்பு விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கலாம் என மத்திய, மாநில அரசுகள் அனுமதித்திருந்தன. அப்போது உள்நாட்டில் உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றான இரும்பின் தேவை குறைவாக இருந்தது.
 உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் கரோனா தொற்றில் இருந்து மீண்டு தொழில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த நாடுகளில் இரும்புத் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த ஆண்டின் 4-ஆவது காலாண்டில் மட்டுமே தொழில் துறையில் இரும்பு பயன்பாடு அதிகரித்தது.
 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு டன் இரும்புத் தகடு ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதே இரும்புத் தகடு ஒரு டன் ரூ.85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 மாத காலத்தில் இரும்பின் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்ந்துவிட்டதால், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பெரிய இரும்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அபார வளர்ச்சி அடைந்தன.
 ஆனால் இந்த கரோனா காலத்தில் மூடியிருந்த சிறு, குறுந்தொழில் துறையினர், வாகன உதிரி பாகங்களுக்குத் தேவையான கச்சா பொருளான இரும்புக் கம்பி, குழாய், தகடு ஆகியவற்றை வாங்கச் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.
 உள்நாட்டில் தேவை குறைவாக இருந்தபோதும் இரும்பின் விலை இரு மடங்காக உயர்ந்திருப்பதால், இரும்பை வாங்கிப் பயன்படுத்தும் பிற தொழில் துறையினரும் கட்டுமானத் துறையினரும் கடும் இக்கட்டுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
 எனவே, இரும்பின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்பில் 25% அளவுக்கு மட்டுமே ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உற்பத்தியாகும் இரும்பில் 75 சதவீத அளவை உள்நாட்டிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 இரும்பு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தால்தான் இரும்பு விலை குறையும். அதனால் கட்டுமானச் செலவும் குறையும். அதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையும் வேகமெடுக்கும்.
 சில தனியார் நிறுவனங்கள் இரும்பு விலையைக் குறைத்தால் மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானச் செலவினங்கள் தானாகக் குறையும். தவிர, வாகன உற்பத்தியும் வேகமெடுக்கும். இதன் மூலமாக, சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க முடியும்.
 இந்தியாவில் கட்டுமானம், சிறு, குறுதொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கானோருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அப்போது அதிகரிக்கும்.
 ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தொழில் முடக்கம், வங்கிக் கடனுக்கு வட்டி செலுத்த முடியாத சூழல் உள்ளிட்ட பலமுனை தாக்குதலில் சிக்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஏற்கெனவே தத்தளித்து வருகின்றன.
 தற்போதைய இரும்பு விலை உயர்வால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கச்சாப் பொருளுக்கே இரு மடங்கு செலவிட வேண்டியிருக்கிறது. இது சிறுதொழில்களை மிக மோசமாக வீழ்த்திவிடும் என தொழில் முனைவோர் கூறுகின்றனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கத்தின் இணை செயலாளர் (டான்சியா) வெற்றி.ஞானசேகரன், ஒசூர் சிறு, குறுந்தொழில் சங்கத்தின்(ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி ஆகியவை இணைந்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது.
 சிறு தொழிற்சாலைக் கடனுக்கான தவணை (இஎம்ஐ) வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைக்க வேண்டும். அதற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 மூடப்பட்ட தொழிற்சாலைகளுக்கான குறைந்தபட்ச மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
 கச்சாப் பொருளின் விலையைக் குறைக்க மத்திய அரசு இரும்பு ஏற்றுமதியை 10% முதல் 20% மட்டுமே அனுமதிக்க வேண்டும். உற்பத்தியாகும் மொத்த இரும்பில் பெரும் பகுதியை உள்நாட்டிலேயே விற்பனை செய்யுமாறு தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
 தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் இஎஸ்ஐ பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கரோனா பொது முடக்க காலத்தில் ராஜீவ் காந்தி சிரமிக் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசே ஊதியம் வழங்க வேண்டும். இதனை இஎஸ்ஐ நிறுவனத்தில் பயனாளிகள் கோராமல் உள்ள ரூ.95,000 கோடி நிதியில் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும் என்றனர்.
 -த.ஞானப்பிரகாசம்

பிரதமரிடம் வலியுறுத்தல்
 இரும்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அகில இந்திய சிறு, குறுந்தொழில் சங்கங்களின் கவுன்சில் கூட்டம் கடந்த புதன்கிழமை (ஜூன் 9) காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 200 தொழில்துறை சங்கங்கள் பங்கேற்றன.
 அதன் முடிவில், இரும்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும் இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்த தொழில் துறையினர், இரும்பு விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
 இரும்பு விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com