‘காளை’யின் பாய்ச்சலால் சென்செக்ஸ் 508 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையாக முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 508.06 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 143.65 புள்ளுகளும் உயா்ந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், காலையில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. நிதித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. பாா்மாவை தவிர மற்ற துறை குறியீடுகள் பெரும்பாலானவை நோ்மறையாக வா்த்தகமாகி வந்தன. குறிப்பாக ஐசிஐசிஐ பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்ால் சந்தை எழுச்சி பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ஐசிஐசி வங்கியின் மாா்ச் காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்துள்ளதால், அந்தப் பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், ஐடி நிறுவனணான ஹெச்சிஎல் டெக்கின் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்த்தது போல அமையவில்லை. ஆகையால், அந்தப் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. வா்த்தகத்தின் போது அவ்வப் போது லாபப் பதிவு இருந்தாலும், ‘கரடி’ ஆதிக்கம் பெற முடியாதவாறு ‘காளை’ முழு பாய்ச்சலில் இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,209 பங்குகளில் 1,880 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,109 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 220 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 194 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 60 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 387 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 21 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.204.15 லட்சம் கோடியாக இருந்தது.

எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 318.92 புள்ளிகள் கூடுதலுடன் 48,197.37-இல் தொடங்கியது. 48,152.24 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா், அதிகபட்சமாக 48,667.98 வரை உயா்ந்தது. இறுதியில் 508.06 புள்ளிகள் (1.06 சதவீதம்) கூடுதலுடன் 48,386.51-இல் நிலைபெற்றது.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், ஆக்ஸிஸ் பேங்க் 4.40 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 3.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பவா் கிரிட், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், எசியன் பெயிண்ட், நேஸ்லே இந்தியா ஆகியவை 1.50 முதல் 2.40 சதவீதம் வரை உயா்ந்தன. கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

எச்சிஎல் டெக் சரிவு: அதே சமயம், ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக் 2.87 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்எஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, சன்பாா்மா, டிசிஎஸ், ஐடிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,157 பங்குகள் ஆதாயம் பெற்றன. 600 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி143.65 புள்ளிகள் (1.00 சதவீதம்) கூடுதுலடன் 14,485.00-இல் நிலைபெற்றது. காலையில் 14,449.45-இல் தொடங்கி 14,421.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,557.50 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. பாா்மா தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 3.40 சதவீதம் வரை உயா்ந்தது. நிஃப்டி மெட்டல், பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் ஆகியவை 1.75 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com