ரிலையன்ஸ், நிதித் துறை பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் 558 புள்ளிகள் முன்னேற்றம்

பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எழுச்சி இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எழுச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 557.63 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 168.05 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
 கரோனா நெருக்கடிக்கு இடையே, பங்குச் சந்தை வலுவாகத் தொடங்கி இறுதி வரை தொடர்ந்து முன்னேற்றம் கண்டது. முன்பேர வர்த்தகத்தில் ஏப்ரல் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளதால், அதன் தாக்கமும் சந்தையில் இருந்தது. நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக வரவேற்பு அதிகம் காணப்பட்டதும் சந்தை எழுச்சி பெற்றதற்கு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.2.44 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,119 பங்குகளில் 1,921 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,037 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 215 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 47 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 343 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 190 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.44 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.206.59 லட்சம் கோடியாக இருந்தது.
 2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 37.57 புள்ளிகள் கூடுதலுடன் 48,424.08-இல் தொடங்கி 48,399.53 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 49,009.26 வரை உயர்ந்தது. இறுதியில் 557.63 புள்ளிகள் (1.15 சதவீதம்) கூடுதலுடன் 48,944.14-இல் நிலைபெற்றது.
 எல் அண்ட் டி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், எல் அண்ட் டி 3.33 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.03 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்டவை 1 முதல் 2.70 சதவீதம் வரை உயர்ந்ன. ஹிந்துஸ்தான் யுனி லீவர், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகிய முன்னணிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 மாருதி சுஸுகி சரிவு: முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 1.02 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, கோட்டக் பேங்க், நெஸ்லே இந்தியா, எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையம் வீழ்ச்சியைச் சந்தித்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,156 பங்குகள் ஆதாயம் பெற்றன. 477 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி168.05 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயர்ந்து 14,653.05-இல் நிலைபெற்றது. காலையில் 14,493.80-இல் தொடங்கி 14,484.85 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 14,685.00 வரை உயர்ந்தது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 2.71 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.30 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன.


 எச்சரிக்கை..!
 தொடர்ந்து 6 நாள்களாக இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 6 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. முன்பேர வர்த்தகத்தில் இந்த மாதக் கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com