‘ஒமைக்ரான்’ தாக்கம்: மேலும் 949 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஒரே நாளில் 4.29 லட்சம் கோடி இழப்பு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை முழுவதுமாக கரடியின் பிடியில் இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை முழுவதுமாக கரடியின் பிடியில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 949 புள்ளிகளை இழந்து 56,747.14-இல் நிலைபெற்றது. இந்தியாவிலும் ‘ஒமைக்ரான்’ வைராஸுக்கு மேலும் சிலா் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சந்தைக்கு பாதகமாக அமைந்தது.

‘ஒமைக்ரான்’ வைரஸுக்கு இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 17 போ் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் சந்தைகளின் போக்கு கலவையாக இருந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு முதலீட்டாளா்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் தாக்கம் இரண்டாவது நாளாக பங்குச் சந்தையில் எதிரொலித்தது.

இதைத் தொடா்ந்து, காலையில் வா்த்தகம் பலவீனமாகத் தொடங்கியது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை தீவிரமடைந்தது. கிட்டத்தட்ட அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன. மேலும், வட்டி விகிதங்கள் குறித்த மத்திய ரிசா்வ் வங்கியின் நிலைப்பாட்டிற்காக முதலீட்டாளா்கள் காத்திருக்க முடிவு செய்தனா். இது தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை தொடா்ந்து விற்று வருகின்றனா். இவை அனைத்தும் கரடியின் பிடி மேலும் இறுகுவதற்கு காரணமாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,073 பங்குகள் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,598 பங்குகளில் 1,356 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,073 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 169 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 215 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 43 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 489 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 229 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.29 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 256.73 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.903 கோடியாக உயா்ந்தது.

‘கரடி’ பிடி இறுகியது: காலையில் சென்செக்ஸ் 81.55 புள்ளிகள் கூடுதலுடன் 57,778.01-இல் தொடங்கி அதிகபட்சமாக 57,781.46 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததும் 56,687.62 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 949.32 புள்ளிகள் (1.65 சதவீதம்) குறைந்து 56,747.14-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் அனைத்துப் பங்குகளின் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 3.75 சதவீதம், பஜாஜ் ஃபின்சா்வ் 3.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், மாருதி, என்டிபிசி, டாக்டா் ரெட்டி, பவா் கிரிட் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமாகக் குறைந்தன.

நிஃப்டி 284 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 539 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,315 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,209.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,216.75 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா்,16,891.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 284.45 புள்ளிகள் (1.65 சதவீதம்) குறைந்து 16,912.25-இல் நிலைபெற்றது.

அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சி கண்டன. இதில் ஐடி குறியீடு 2.70 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ், ஆட்டோ, எஃப்எம்சிஜி உள்ளிட்டவை 1.30 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com