மெய்நிகர் வணிகம் 1: கிரிப்டோகரன்சி அறிமுகம்

கிரிப்டோகரன்சி ’பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கணினி வலையமைப்பின் மூலம் எந்த  தடையுமில்லாமல் தொடர்ந்து நடைபெறும் ஒரு ‘மெய்நிகர்’(virtual) வணிகம்
கிரிப்டோ வணிகம் 1: கிரிப்டோகரன்சி அறிமுகம்
கிரிப்டோ வணிகம் 1: கிரிப்டோகரன்சி அறிமுகம்

வரலாற்றில் காலத்திற்கு ஏற்ப மனிதன் தனக்கான பொருளைப் பெற தொடர்ந்து எதாவது ஒரு வணிகத்தில் ஈடுபட்டே வந்திருக்கிறான். அடிமையாக உடல் உழைப்பைச் செலுத்தியும் , பண்டமாற்றம் செய்தும், உடமைகளை விற்றும் என தொடர்ந்த அந்த வர்த்தகங்கள் அனைத்தும் இன்று பணப்பரிமாற்றாமாக உருவாகியிருக்கிறது. அதை முதலீடு செய்து அதிக லாபத்தை பெற உருவாக்கப்பட்ட வணிகங்களில் தவிர்க்க முடியாத சந்தையாக மாறியிருக்கிறது கிரிப்டோகரன்சி.

கிரிப்டோகரன்சி  என்றால் என்ன?

கிரிப்டோகரன்சி ’பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கணினி வலையமைப்பின் மூலம் எந்த  தடையுமில்லாமல் தொடர்ந்து நடைபெறும் ஒரு ‘மெய்நிகர்’(virtual) வணிகம். அதாவது இதில் இருக்கும் எந்த நாணயத்திற்கும் உறுதியான மதிப்போ, இவ்வளவுதான் விற்க வேண்டும் என்கிற எல்லையோ எதுவும் கிடையாது.

உலகம் முழுவதிலும் உள்ள எந்த நாட்டின் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இயங்கும் ஒர் வணிக அமைப்பு. 2008-ஆம் ஆண்டு சதோஷி நாகாமோடா என்கிற ஜப்பானியரால் பிட்காயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரே அந்த வணிகத்தை நிர்வாகித்து வருகிறார் என்றும் இணையத்தில் தகவல் இருக்கிறது. ஆனால் அது தான் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சியை சென்னையில் இருப்பவர் வாங்கி அவருடைய வங்கிக்கணக்கின் மூலம் பரிவர்த்தனை செய்வது எத்தனை சிக்கலான ஒன்று? எப்படி அதை எந்தச் சிரமமும் இல்லாமல்  வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இந்த கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை. 

கிரிப்டோகரன்சியின் மதிப்பு என்ன?

இன்றைய நிலவரப்படி உலகில் 10,000-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் வணிக சந்தையில் இருக்கிறது. காலை முதல் மாலை வரையிலான வியாபாரம் என்றில்லாமல் வருடம் முழுவதும் 24/7 என்கிற அடைப்படையில் நொடிக்கு  நொடி விலைகள் மாறிக் கொண்டிருக்கும்.

கிரிப்டோகரன்சியில் 7 வகைகள் இருக்கிறது. பிட்காயின் மற்றும் லைட்காயின் வகைகளே இன்று பெரிய வணிகத்தை தக்கவைத்திருப்பவை. 2008-ல் ஆரம்பிக்கட்ட கிரிப்டோவின் முதல் நாணயமான பிட்காயினின் இன்றைய மதிப்பு ரூ.40 லட்சம். இதற்கு அடுத்ததாக இருக்கும் பிரபல கிரிப்டோகளான எத்திரியம்(ethereum), பினான்ஸ்(binance), தெதர்(tetar), சோலானா(solona) போன்றவை அதிகம் வர்த்தகமாகும் நாணயங்கள்.

இவற்றின் மதிப்பும் லட்சங்களில் , ஆயிரங்களில் என இருப்பவை. சமீபத்தில் உலக பெரும் செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் ‘டோஜ் காயின்’ நாணயத்தை அவர் தலைமையில் இருக்கும் நிறுவனமான ‘டெஸ்லா’ முதலீடு செய்ய இருக்கிறது என அறிவித்ததும் அதன் மதிப்பு 25% அதிகரித்தது. இப்படியானவர்களின் வருகையும் கணிப்புகளுமே அதன் மதிப்பை கூட்டுகிறது. 

பங்குச்சந்தைக்கும் கிரிப்டோவுக்கும் என்ன வித்யாசம்?

ஒரு பொருளின் தேவை என்ன? அதற்கான வணிக நோக்கம் என்ன? என்கிற அடிப்படையில் தான் உலகம் முழுவதும் உற்பத்தியும் அது சார்ந்த நிறுவனங்களும் இயங்கிவருகிறது.

அந்த நிறுவனங்களை நிர்வகிக்க பெரும் முதலீடு தேவை. அதற்காக அவற்றை பங்குச் சந்தையில் பட்டியலிடும் போது அடிப்படை விலையிலிருந்து யார் வேண்டுமானாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ‘மறைமுக முதலாளியாக’ மாறலாம். பங்கின் மதிப்பு கூடும் போது விற்று லாபத்தைப் பார்க்கலாம்.

ஆனால், கிரிப்டோ எதன் அடிப்படையிலும் இயங்காதது. உதாரணத்திற்கு ‘பிட்காயின்’ போன்ற பெரிய நாணயங்களுக்கு மட்டுமே நிறுவனம் இருக்கிறது. பிற, கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் அடையாளமில்லாமல் உருவாக்கப்பட்டவை. அவற்றில் எந்த நம்பிக்கையில் முதலீடு செய்ய முடியும்? ஆனால், பங்குச் சந்தையை விட கிரிப்டோவில் தான் அதீத லாப வளர்ச்சி உண்டு.

கிரிப்டோகரன்சியின் வளர்ச்சி

கிரிப்டோ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இத்தனை பெரிய வளர்ச்சியை அடையும் என எந்தப் பொருளாதார வல்லுனர்களும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அது உருவான அடுத்த 10 ஆண்டுகளில் அபாரமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

பலர் இதனால் செல்வந்தர்களாக மாறியதுடன் பல நாணயங்களின் முதலாளிகளாகவும் செயல்பட்டு வருகிறார்கள். எப்படி குறுகிய காலத்தில் அசூர வளர்ச்சியை அடைந்தது எனக் கேட்டால், அது கொடுத்த ‘ரிட்டன்ஸ்’ தான் காரணம். ஆயிரம் ரூபாய் 2 நாட்களில் 1 லட்சமாக மாறிய  வரலாறும் இருக்கிறது. இந்த பெரிய லாப வேட்கையே பலரை இந்த வணிகத்திற்குள் அழைத்து வந்து கிரிப்டோ வளர்ச்சியை துரிதப்படுத்தியிருக்கிறது.

ஏன் அரசாங்கம் இதை எதிர்க்கிறது?

இந்தியா என்றில்லை எங்கெல்லாம் கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் இருக்கிறதோ அந்தந்த நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரி என்கிற ஒன்று இந்த வணிகத்தில் இருந்து செல்லாது.

மேலும், ஆயுதங்கள் வாங்க , போதைப்பொருள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் பணப்பரிமாற்றம் செய்ய கிரிப்டோ சுலபமான வழியாக இருப்பதால் பல அரசாங்கங்கள் இதை முற்றிலும் தடை செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக , சாமானியர்கள் இந்த வணிகத்தில் ஈடுபடுவதைப் போல கருப்புப் பணங்களும் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு அதனால் கடுமையான பணவீக்கம் உருவாகும் என பல பொருளாதார நிபுணர்கள் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

கிரிப்டோ வணிகத்தில் ஈடுபடலாமா?

அது உங்களுடைய தேர்வு. பங்குச்சந்தை போன்ற வர்த்தகத்தில் ஈடுபடும் போது அதில் அரசின் தலையீடும், முதலீடுகளும் இருக்கிறது. ஏமாற்றி விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டிற்கு இடமில்லை. ஆனால் கிரிப்டோவின் அமைப்பு யாரிடமிருக்கிறது என்றே தெரியாத போது அதில் ஏமாறுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது.

ஆனால், இதுவரை அப்படியான பெரிய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்கிற குருட்டு நம்பிக்கையில் கிரிப்டோவில் இறங்குவதும் ஆபத்தான ஒன்று. இருப்பினும், பல பொருளாதார வல்லுனர்கள் வரும்காலத்தில் கிரிப்டோவின் வளர்ச்சியும் தேவையும் அதிகரிக்கும் எனவும் அதை முற்றிலும் தடை செய்வது இயலாது ஒன்று எனக் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com