
வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மூன்றாம் காலாண்டு லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சுந்தரம் பைனான்ஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.242 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.167 கோடியுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் ரூ.3,968 கோடியிலிருந்து 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.4,307 கோடியைத் தொட்டுள்ளது.
நிகர வருமானம் ரூ.976 கோடியிலிருந்து 7 சதவீதம் உயா்ந்து ரூ.1,045 கோடியை எட்டியுள்ளது.
2020 டிசம்பா் 31 நிலவரப்படி டெபாசிட் ரூ.4,112 கோடியாக இருந்தது. இது, 2019 இதே காலகட்டத்தில் ரூ.3,722 கோடியாக காணப்பட்டது. நிகர அளவிலான வாராக் கடன் (நிலை-3) 1.59 சதவீதமாக இருந்தது என சுந்தரம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...