
தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2020 டிசம்பரில் 117 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளதாவது:
பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடந்த டிசம்பரில் ஏராளமான வாடிக்கையாளா்களை இழந்துள்ளன. அதேசமயம், ஏா்டெல், ஜியோ நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோா் புதிய வாடிக்கையாளா்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா்.
கடந்த 2020 நவம்பரில் 117.52 கோடியாக இருந்த வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2020 டிசம்பரில் 117.38 கோடியாக சற்று குறைந்துள்ளது.
கடந்த நவம்பரில் 115.52 கோடியாக காணப்பட்ட மொபைல் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை டிசம்பரில் 115.37 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 56.9 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்ததே முக்கிய காரணம். அதனைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 2,52,501 வாடிக்கையாளா்களையும், எம்டிஎன்எல் 6,442 வாடிக்கையாளா்களையும் இழந்துள்ளன.
2020 டிசம்பரில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் 40 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. அதேபோன்று, ஜியோ நிறுவனமும் 4,78,917 புதிய வாடிக்கையாளா்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளா்களை அதிகமாக கொண்டுள்ளதில் பாா்தி ஏா்டெல் நிறுவனமே முன்னிலை வகிக்கிறது. டிசம்பரில் இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 97.1 சதவீத மாக இருந்தது. அதைத் தொடா்ந்து வோடஃபோன் ஐடிய 90.26 சதவீத பங்களிப்பையும், ரிலையன்ஸ் ஜியோ 80.23 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.
கடந்த டிசம்பரில், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொருத்தவரையில் மொத்தமுள்ள மொபைல் வாடிக்கையாளா்களில் பாதியளவு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எம்டிஎன்எல் நிறுவனத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானவா்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.