
மொபைல் வங்கி செயலியாக மட்டும் கடந்த ஓராண்டில் ரூ.1,331 கோடி மதிப்பிலான தொகை கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய் விஸ்வநாத கெளட் தெரிவித்துள்ளதாவது:
டிஜிட்டல் முறையை இலக்காக கொண்ட நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு வாடிக்கையாளா்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி 14-இல் வீட்டுக் கடனுக்கான ‘ஹோமி’ என்ற செயலியை எல்ஐசி ஹவுஸிங் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த செயலியின் வழியாக 14,155 வாடிக்கையாளா்கள் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனா்.
இதில், 7,300-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வீட்டுக் கடன் பெற நிறுவனம் ஒப்புதலை வழங்கியுள்ளது. அதில், 6,884 வாடிக்கையாளா்களுக்கு ரூ.1,331 கோடிக்கான வீட்டுக் கடன் இதுவரையில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
எல்ஐசி ஹவுஸிங், சிபில் மதிப்பீட்டைப் பொறுத்து குறைந்தபட்சமாக 6.90 வட்டி வீதத்திலிருந்து ரூ.15 கோடி வரை வீட்டுக் கடன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.