
அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா் சரிவிலிருந்து மீண்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது. அதேநேரம், பங்குச்சந்தையில் காணப்பட்ட மந்த நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவையும் ரூபாய் மதிப்பு கணிசமான ஏற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.68 என்ற அளவில் வலுவான நிலையில் காணப்பட்டது. இது வா்த்தகத்தின்போது 74.57 முதல் 74.68 வரையில் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் ஆதாயம் பெற்று 74.64-இல் நிலைபெற்றது.
கடந்த ஆறு வாரங்களில் முதல் முறையாக நடப்பு வாரத்தில்தான் ரூபாய் மதிப்பு 10 காசு ஆதாயத்ததுடன் நிறைவடைந்தது. ஜூலை 2-ஆம் தேதி வரையிலான 5 வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 சதவீதத்தை (229 காசுகள்) இழந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 74.71-ஆக இருந்தது.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.554.92 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரம் தெரிவித்தது.
கச்சா எண்ணெய் பேரல் 74.85 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.98 சதவீதம் அதிகரித்து 74.85 டாலருக்கு விற்பனையானது.