
பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை ஏற்ற, இறக்கத்துடன் தள்ளாட்டத்தில் இருந்தது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 53 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 12 புள்ளிகளையும் இழந்து நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.56 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.229.58 லட்சம் கோடியாக இருந்தது.
ஆசிய சந்தைகள் பலவீனமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலித்தது. இதனால், வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்ட நிலையில், ஐடி, பார்மா பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்து சந்தைக்கு ஆதரவாக இருந்தன.
குறிப்பாக எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சந்தை தள்ளாட்டத்துக்கு காரணம். அதேசமயம், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆததரவு காணப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,344 பங்குகளில் 1,837 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,366 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 141 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 548 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 595 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 157 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.56 ஆயிரம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.229.58 லட்சம் கோடியாக இருந்தது.
தள்ளாட்டம்..: சென்செக்ஸ் காலையில் 100.21 புள்ளிகள் கூடுதலுடன் 52,428.72-இல் தொடங்கி 52,432.43 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் தள்ளாட்டத்தில் இருந்து வந்த சென்செக்ஸ், 52,135.04 வரை கீழே சென்றது. இறுதியில் 52.94 புள்ளிகளை (0.10 சதவீதம்) இழந்து 52,275.57-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிர்மறையாகச் சென்று உச்சநிலையிலிருந்து 297.39 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.
டெக் மஹிந்திரா முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் டெக் மஹிந்திரா 2.53 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டைட்டன், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஐடிசி, மாருதி சுஸýகி, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்றன.
எஸ்பிஐ வீழ்ச்சி: அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த எஸ்பிஐ 1.21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிட், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 12 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 946 பங்குகள் ஆதாயம் பெற்றன. 821 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,773.90-இல் தொடங்கி 15,778.80 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 15,680.00 வரை கீழே சென்றது. இறுதியில் 11.55 புள்ளிகளை (0.07 சதவீதம்) 15,740.10-இல் நிலைபெற்றது.
துறைவாரியாகப் பார்த்தால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க், மெட்டல், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஐடி குறியீடு 1.20 சதவீதம் உயர்ந்தது. எஃப்எம்சிஜி, பார்மா, ரியால்ட்டி, மீடியா குறியீடுகளும் ஆதாயம் பெற்றன.