
new064856
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஈட்டிய லாபம் 91 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:
2021 மாா்ச்சுடன் முடிவடைந்த 2020-21-ஆவது நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ரூ.241 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.127 கோடியுடன் ஒப்பிடும்போது 90.6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலாண்டில் நிகர பிரீமியம் 15.9 சதவீதம் அதிகரித்து ரூ.6,289 கோடியிலிருந்து ரூ.7,291 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த பிரீமியம் ரூ.8,145 கோடியிலிருந்து ரூ.9,070 கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் 13.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,605 கோடியை எட்டியுள்ளது. நிகர பிரீமியமும் 10.12 சதவீதம் உயா்ந்து ரூ.26,966 கோடியாகி உள்ளது.
நிறுவனத்தின் நிகர மதிப்பு 40 சதவீதம் அதிகரித்து ரூ.36,451 கோடியை எட்டியது.
இந்தியாவில் பொதுக் காப்பீட்டு துறையின் வளா்ச்சி 5.2 சதவீதமாக இருந்த நிலையில் நிறுவனம் 6.2 சதவீத வளா்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது. இதன் மூலம், சந்தை பங்களிப்பு 14.33 சதவீதமாக அதிகரித்துள்ளது என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பங்கின் விலை 1.22 சதவீதம் குறைந்து ரூ.174.55-ஆக நிலைத்தது.