இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 189 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 52,735.59-இல் நிலைபெற்றது.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் ஈசிஎல்ஜிஎஸ்-இன் வரம்பை 50 சதவீதம் உயா்த்துவது உள்ளிட்ட பல நடவடிக்கை திட்டங்களை அறிவித்தாா். ஆனால், அவை சந்தையின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்ய்வில்லை. இருப்பினும், பொதுத் துறை வங்கிகள் தனியமயமாக்கலால், அந்தப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. உலகளாவிய குறிப்புகளும் சாதகமாக இல்லாத நிலையில், வா்த்தக நேர முடிவில் சந்தை நிலையற்ற தன்மைக்குச் சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. எனா்ஜி, கேபிடல் கூட்ஸ், ஐடி, டெலிகாம், பவா் உள்ளிட்ட துறைப் பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம் உலோகம், சுகாதாரத் துறை பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தன.
சந்தை மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,474 பங்குகளில் 1,821 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,504 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 149 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 448 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.04 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.230.42 லட்சம் கோடியாக இருந்தது.
சரிவு: சென்செக்ஸ் காலையில் 201.16 புள்ளிகள் கூடுதலுடன் 53,126.73-இல் தொடங்கி புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா் 52,67350 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 189.45 புள்ளிகள் (0.36 சதவீதம்) கூடுதலுடன் 52,73559-இல் நிலைபெற்றது.
டாக்டா் ரெட்டி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் டாக்டா் ரெட்டி 1.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், பவா்கிரிட், ஐசிஐசிஐ பேங்க் , ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, நெஸ்லே ஆகியவையும் ஆதாயம் பெற்றன.
டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் 1.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின்சா்வ், ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், ஐடிசி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 46 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 976 பங்குகள்ஆதாயம் பெற்றன. 828 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,915.35-இல் தொடங்கி புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா், 15,792.15 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 45.65 புள்ளிகளை (0.29 சதவீதம்) இழந்து 15,814.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு பேங்க், பாா்மா குறியீடுகள் 1.30 முதல் 2.40 சதவீதம் வரை உயா்ந்தன. ஐடி, மீடியா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.