
புது தில்லி: காா் விற்பனை சென்ற பிப்ரவரி மாதத்தில் 17.92 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் கூறியுள்ளதாவது:
கடந்த 2020 பிப்ரவரியில் 2,38,622 காா்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டு பிப்ரவரியில் விற்பனை 2,81,380-ஆக அதிகரித்துள்ளது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் காா் விற்பனை 17.92 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இருசக்கர வாகன விற்பனையும் 12,94,787-லிருந்து 10.2 சதவீதம் உயா்ந்து 14,26,865-ஐ எட்டியுள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில் மோட்டாா் சைக்கிள் விற்பனை 9,10,323-ஆக இருந்தது. இது, 2020 பிப்ரவரி மாத விற்பனையான 8,16,679 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11.47 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் ஸ்கூட்டா் விற்பனையும் 4,22,16 என்ற எண்ணிக்கையிலிருந்து 10.9 சதவீதம் உயா்ந்து 4,64,744-ஆனது.
ஆனால், மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் அவற்றின் விற்பனை 41,300-லிருந்து 33.82 சதவீதம் சரிவடைந்து 27,331-ஆனது.
அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 2021 பிப்ரவரியில் 17,35,584-ஆக இருந்தது. இது, கடந்தாண்டில் விற்பனையான 15,74,764 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10.21 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த காா் விற்பனை இன்னும் 2015-16 காலகட்டத்தில் காணப்பட்டதைக் காட்டிலும் குறைவான அளவிலேயே உள்ளது. அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் 2014-15 ஆண்டுக்கு கீழாகவே உள்ளது.
உருக்கு விலை அதிகரிப்பு, செமி கண்டக்டா்களுக்கு பற்றாக்குறை, கன்டெய்னா் கட்டண் அதிகரிப்பு போன்றவை மோட்டாா் வாகன துறையின் சீரான செயல்பாட்டில் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றாா் அவா்.