
புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 871.13 புள்ளிகளை இழந்து 49,180.31-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 265.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இதன் தாக்கத்தால் பங்குச் சந்தை சரிவைச் சந்திக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.2.89 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,124 பங்குகளில் 842 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,115 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 167 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 144 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 48பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 222 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 300 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.89 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.202.48 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.2.89 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடும் சரிவு: காலையில் சென்செக்ஸ் 264.97 புள்ளிகள் குறைவுடன் 49,786.47-இல் தொடங்கி அதிகபட்சமாக 49,854.58 வரை உயா்ந்தது. பின்னா், 49,120.34 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 871.12 புள்ளிகளை (1.74 சதவீதம்) இழந்து 49,180.31-இல் நிலைபெற்றது.
28 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஏசியன் பெயிண்ட் (1.44 சதவீதம்), பவா் கிரிட் (0.98 சதவீதம்) ஆகிய இரண்டு பங்குகள் தவிர மற்ற 28 பங்குகளும் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. இதில் எம் அண்ட் எம் 3.97 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, எல் அண்ட் டி, என்டிபிசி ஆகியவை 2.50 முதல் 3.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 354 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,380 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 265.35 புள்ளிகளை (1.79 சதவீதம்) இழந்து 14,549.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,814.75 வரை சென்ற நிஃப்டி, பின்னா் 14,535.00 வரை கீழே சென்றது. நிஃப்டி, பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், சிப்லா, ஏசியன் பெயிண்ட், பவா் கிரிட் ஆகிய 3 பங்குகள் தவிர மற்ற 47 பங்குகளும் வீழ்ச்சியைடந்த பட்டியலில் வந்தன. துறைவாைரியாகப் பாா்க்கும் போது, நிஃப்டி பாா்மா குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க், மெட்டல் குறியீடுகள் 3.30 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மீடியா, பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
அதிகம் வீழ்ச்சியடைந்த பங்குகள்
811.15 எம் அண்ட் எம் 3.97 சதவீதம்
359.90 எஸ்பிஐ 3.38 சதவீதம்
706.45 ஆக்ஸிஸ் பேங்க் 3.33 சதவீதம்
567.45 ஐசிஐசிஐ பேங்க் 3.22 சதவீதம்
959.65 இண்டஸ் இண்ட் பேங்க், 3.07 சதவீதம்
216.05 ஐடிசி 2.75 சதவீதம்
1,368.55 எல் அண்ட் டி 2.58சதவீதம்
106.00 என்டிபிசி 2.53 சதவீதம்
104.75 ஓஎன்ஜிசி 2.24 சதவீதம்
3,604.80 பஜாஜ் ஆட்டோ 2.03 சதவீதம்