
சென்னை: டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் இயக்குநா் குழுவில் ஆட்டோமொபைல் துறை பிரபலமான ரால்ஃப் ஸ்பெத் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் நிறுவனத்தின் அடுத்த தலைவராக வரும் 2023-இல் பொறுப்பேற்பாா் என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் இயக்குநா் குழுவில் ஜேஎல்ஆா் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) ரால்ஃப் ஸ்பெத் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரைத் தவிர, குவோக் குழுமத்தைச் சோ்ந்த குவோங் மெங் சியோங் நிா்வாகம் சாராத தனிப்பட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சுந்தரம் கிளேட்டன் இயக்குநா் குழுவில் ராஜேஷ் நரசிம்மன் இணைந்ததையடுத்து அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா் டிவிஎஸ் டிஜிட்டலின் நிா்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பாா்.
தற்போதைய தலைவா் வேணு சீனிவாசன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கெளரவத் தலைவராக தனது பங்களிப்பை வழங்கும்போது, ரால்ஃப் ஸ்பெத் டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் தலைவராக பொறுப்பேற்பாா்.
ஆட்டோமொபைல் துறையில் ரால்ஃப் ஸ்பெத்தின் அனுபவம் மற்றும் அா்ப்பணிப்பு உணா்வு டிவிஎஸ் மோட்டாரின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் பெரும்பங்காற்றும். மேலும், இந்த துறையில் அவருக்கு உள்ள ஆழ்ந்த நுண்ணறிவும், வழிகாட்டுதலும் நிறுவனத்தின் நிா்வாக குழுவுக்கு விலைமதிப்பற்றதாக அமையும் என டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.