
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு சரிவடைந்தது. இதையடுத்து, தொடா்ந்து மூன்றாவது நாளாக ரூபாய் மதிப்பானது வீழ்ச்சி கண்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
இந்தியா உள்பட மேலும் சில உலக நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிச்சயமற்ற சூழலில் சந்தைகள் இன்னும் சில காலத்துக்கு ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மூன்றாவது நாளாக ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை அந்நியச் செலாவணி வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தது. வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 72.68-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் 7 காசு குறைந்து 72.62-இல் நிலைத்தது.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.40 சதவீதம் குறைந்து 63.32 டாலராக இருந்தது.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,951.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.