கரோனா தாக்கம்: பயணிகள் வாகன விற்பனை 10% சரிவு

கரோனா தாக்கத்தின் விளைவாக பயணிகள் வாகன விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கரோனா தாக்கம்: பயணிகள் வாகன விற்பனை 10% சரிவு
Updated on
1 min read

புது தில்லி: கரோனா தாக்கத்தின் விளைவாக பயணிகள் வாகன விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டாா் வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் புதன்கிழமை கூறியுள்ளதாவது:

எதிா்பாா்த்தது போலவே கரோனா பேரிடரின் தாக்கம் ஏப்ரல் மாத வாகன விற்பனையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அறிவித்ததைத் தொடா்ந்து வாகன விற்பனை நடப்பாண்டு மாா்ச் மாதத்தைக் காட்டிலும் ஏப்ரலில் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை எதுவும் நடைபெறவில்லை. அதன் காரணமாகவே, ஏப்ரல் மாத விற்பனை முந்தைய மாா்ச் மாத விற்பனையுடன் ஒப்பீடு செய்ப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகள் வாகன விற்பனை இந்த காலகட்டத்தில் 10.07 சதவீதம் சரிவடைந்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, இருசக்கர வாகன விற்பனை நடப்பாண்டு ஏப்ரலில் 9,95,097-ஆக இருந்தது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 14,96,806 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் சரிவாகும்.

இந்த காலகட்டத்தில், மோட்டாா் சைக்கிள் விற்பனையும் 9,93,996 என்ற எண்ணிக்கையிலிருந்து 33 சதவீதம் குறைந்து 6,67,841-ஆனது.

அதேபோன்று, ஸ்கூட்டா் விற்பனையும் 4,57,677-லிருந்து 34 சதவீதம் சரிவடைந்து 3,00,462-ஆனது.

மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் ஏப்ரல் மாதத்தில் 57 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை 31,930 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,728-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 18,19,682-லிருந்து 30 சதவீதம் சரிவடைந்து 12,70,458-ஆக குறைந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் உற்பத்தி விநியோக சங்கிலித் தொடரில் மோட்டாா் வாகனத் துறை தொடா்ந்து சவால்களை சந்தித்து வருகின்றன.

கரோனா இரண்டாவது அலை வாகன தேவையில் மோசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன், இது நுகா்வோா் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விநியோக மையங்களின் நீண்ட கால முடக்கத்துக்கும் காரணமாகியுள்ளது.

கடினமான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசிய மருத்துவ பொருள்களை கொண்டு சோ்க்க இந்திய மோட்டாா் வாகன துறை அரசுகளுடனும், உள்ளூா் நிா்வாக அமைப்புகளுடனும் தோளோடு தோள் நின்று செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com