லாபப் பதிவு: 537 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது. ஐடி, நிதித் துறை நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
லாபப் பதிவு: 537 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
Updated on
2 min read

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது. ஐடி, நிதித் துறை நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 537 புள்ளிகளை இழந்தது.
 எரிசக்தி நெருக்கடி மற்றும் சீனப் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய சந்தைகள் ஏற்ற, இறக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. மேலும், ரஷியா - உக்ரைன் போர், சீனாவின் பொதுமுடக்க அறிவிப்பு, மத்திய வங்கிகளின் பண இறுக்கக் கொள்கை உள்ளிட்டவை உலக அளவில் மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முதலீட்டாளர்கள் நினைப்பதும் பங்குச் சந்தைகளில் இருந்து பாதுகாப்பான முதலீட்டு இடங்களுக்கு நிதி வெளியேறுவதற்கு வழி வகுத்துள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 ஐடி, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் லாபப் பதிவு இருந்ததால், சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,174.05 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 2,274 நிறுவனப் பங்குகள் விலை சரிவு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,485 நிறுவனப் பங்குகளில் 1,096 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. 2,274 பங்குகள் விலை குறைந்தன. 115 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 141 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.68 லட்சம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.266.98 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.37 கோடியை தாண்டியது.
 537 புள்ளிகள் வீழ்ச்சி: ôலையில் 372.93 புள்ளிகள் குறைந்து 56,983.68-இல் தொடங்கிய சென்செக்ஸ், 57,079.03 வரை உயர்ந்தது. பின்னர், 56,584.04 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 537.22 புள்ளிகளை இழந்து 56,819.39-இல் நிலைபெற்றது. முன்பேர வர்த்தகத்தில் ஏப்ரல் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசிநாளாக இருப்பதால், நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து
 காணப்பட்டது.
 சென்செக்ஸில் 24 பங்குகள் விலை வீழ்ச்சி: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், டாடா ஸ்டீல், ஏஷியன் பெயிண்ட், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட 6 நிறுவனப் பங்குகள் மட்டும் சிறிதளவு உயர்ந்தன. மற்ற 24 நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
 இதில், பஜாஜ் ஃபைனான்ஸ் 7.77 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 3.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேப்,
 எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எம், மாருதி சுஸýகி உள்ளிட்டவை 1.50 முதல் 2.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 மேலும், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன.
 நிஃப்டி 162 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 515 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,426 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 39 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. எச்டிஎஃப்சி பேங்க் மாற்றமின்றி ரூ.1,372.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி குறியீடு 162.40 புள்ளிகள் (0.94 சதவீதம்) குறைந்து 17,038.40-இல் நிறைவடைந்தது. காலையில் 127.45 புள்ளிகள் குறைந்து 17,073.35-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,110.70 வரை உயர்ந்தது. பின்னர், 17,958.45 வரை கீழே சென்றது.
 மீடியா தவிர்த்துஅனைத்துக் குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மீடியா குறியீடு மட்டும் 0.07 சதவீதம் உயர்ந்திருந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐடி, எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த் கேர், ஆட்டோ, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com