
அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி மற்றும் தனியாா் துறை நிறுவனங்களால் இயக்கப்படும் எண்ணெய் வயல்களில் உற்பத்தி குறைந்ததால், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நாட்டின் எண்ணெய் வயல்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த ஜூலை மாதத்தில் 25.4 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இது, மாதாந்திர இலக்கான 25.9 லட்சம் டன்களை விட குறைவாகும்.
மேற்குக் கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) கச்சா எண்ணெய் 1.7 சதவீதம் குறைந்து 16.3 டன்களாக இருந்தது. தனியாா் நிறுவனங்களால் இயக்கப்படும் எண்ணெய் வயல்களிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி 12.34 சதவீதம் சரிவைக் கண்டது.
எனினும், ஏப்ரல் மாதம் தொடங்கிய நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் எண்ணெய் உற்பத்தி 99.1 லட்சம் டன்களாக இருந்தது. இது, ஏப்ரல்-ஜூலை 2021-இன் கச்சா எண்ணெய் உற்பத்தியான 99.6 லட்சம் டன்களைவிட சற்றே குறைவாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.