மெய்நிகர் வணிகம் 4: கிரிப்டோகரன்சி சரியான முதலீடா?

உங்கள் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் சம்பாத்தியத்தைத் தாண்டிய முதலீடு என ஒன்று இருக்க வேண்டும்
 கிரிப்டோகரன்சி
 கிரிப்டோகரன்சி

பங்குச் சந்தை தொழிலதிபர் வாரன் ஃபபெட் ’உங்கள் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் சம்பாத்தியத்தைத் தாண்டிய முதலீடு என ஒன்று இருக்க வேண்டும்’ என்கிறார்.

உண்மையிலேயே இன்று உலகம் முழுவதும் பணத்தின் மீதான வீக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.அதுவும் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக நிறைய துறைகளில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.

பல பத்தாண்டுகள் வேலை செய்து 6 இலக்க ஊதியத்தை அடைந்து இறுதியில் அதிகபட்சமாக ஒரு வீட்டைக் கட்டுவதற்காகவா ஒட்டுமொத்த வாழ்வையும் அடமானம் செய்ய வேண்டும்? என்கிற கேள்விதான் பலரை பல முதலீடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. நகை, நிலம், புதிய தொழில் என காலத்திற்கு ஏற்றது போல் முதலீடுகளும் மாறிக்கொண்டே வருகிறது.

அந்த வகையில், இது இணைய முதலீடுகளின் காலம். பங்குச் சந்தையில்  தொடங்கி பல்வேறு செயலிகள் மூலம் சட்டப்பூர்வமற்ற முறையில் கூட பலர் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனாலும், இன்றைய நிலவரப்படி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பது கிரிப்டோகரன்சி வணிகம் தான். 

இந்தியாவில் கிரிப்டோ வணிகத்தில் ஈடுபடுபர்கள் பலரும் இளைஞர்கள். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் பெரிய தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் லாபம் அடைகிறார்களா? அது சரியான முதலீடுதானா?

கிரிப்டோகரன்சி உங்களின் சொத்து அல்ல..

கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அது ஒருநாளும் நம்முடைய சொத்தாக கருதப்படாது. காரணம், அரசாங்கத்தின் எந்த தலையீடுகளும் , ஆதரவும் இந்த வணிகத்தில் இல்லை. முக்கியமாக இந்தியாவில் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்து எந்த முடிவையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றாலும் கிரிப்டோகரன்சியை அங்கீகரிக்க அரசிற்கு விருப்பம் இல்லை. இதனால் உங்கள் கிரிப்டோ முதலீட்டிற்கு உங்கள் ஆசைகளைத் தவிர யாரும் பொறுப்பில்லை. முழுக்க முழுக்க ‘ரிஸ்க்’ வணிகம் தான். 

கிரிப்டோகரன்சியை பலரும் தேர்ந்தெடுக்கக் காரணம் ஒரே நாளில் அது உங்களை உச்சத்தில் கொண்டு செல்லும் என்கிற மாயை. லட்சங்களில் முதலீடு செய்தால் அது சாத்தியம் என்றாலும் லாபம் வரும் வரை காத்திருக்கிற காலங்கள் நிலையானவை அல்ல. 10,000க்கும் மேற்பட்ட கிர்ப்டோகரன்சிகளில் 90 % நாணயங்களுக்கு நிறுவனம், அடையாளம் தெரிந்த உரிமையாளர் என எதுவுமில்லை. பின், எந்த நம்பிக்கையில் முதலீடு செய்து காத்திருப்பது?

ஆனால், ஒருவகையில் இந்தியாவில் பாதுகாப்பான முறையில் சில செயலிகளால் இந்த கிரிப்டோ வணிகம் நடைபெற்று வருகிறது. எப்போது வேண்டுமானல் முதலீடு செய்யலாம் , தேவைப்பட்டால் விற்று பணத்தை வெளியே எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, காயின் சுவிட்ச், வாசி ஆர்எக்ஸ் போன்ற செயலிகள் அவர்களுக்கான இடைத்தரகருக்கான தொகையைப் பெற்றுக்கொண்டு முதலீட்டு பணத்தை வங்கிக்கணக்கிற்கு செலுத்திவிடுகிறார்கள். இதுவரை, அந்த செயலிகள் ஏமாற்றியது இல்லை என்றாலும் அவற்றின் மீது எந்த உத்தரவாதமும் கிடையாது.

பொருளாதார வல்லுனர்களின் கருத்து:

உலகின் பல பொருளாதார வல்லுனர்கள் கிரிப்டோகரன்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத வணிகமாக மாறும் என்பதையும் , பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் இந்த வணிகத்தில் ஒரு நேர்த்தி இருக்கும் என்பதையும் கூறிவருகிறார்கள்.

மேலும், பெரிய அளவிலான முதலீடுகளை செய்யாமல் சிறிய அளவிலேயே இந்த வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்கிற அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் தெரிவிப்பது ’கிரிப்டோகரன்சிகளின் விலை ஊகத்தின் அடைப்படையில் மட்டுமே குறைய, அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது. எந்த ஃபார்முலாவும் இங்கில்லை. அதனால் மிக கவனமுடன் அதில் ஈடுபட வேண்டும்’ என்பதைத்தான். 

கிரிப்டோகரன்சியின் மூலம் பலர் செல்வந்தர்களாக மாறியிருக்கிறார்கள். பலர் மொத்தமாக இழந்தும் இருக்கின்றனர். ஆனால், இந்த வணிகம் முன்னைவிட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால் ‘கண்ணுக்குத் தெரியாத லாட்டரி’ இது. அதன் பெரிய பலமே உலகம் முழுக்க செயல்படுவது, மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ளது என்பதுதான். எல்லாவற்றையும் தாண்டி, கிரிப்டோவில் முதலீடு செய்வது தனிநபர் விருப்பம். இருப்பினும், அதில் ஏமாறவும் பல வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com