மெய்நிகர் வணிகம் 3: கிரிப்டோகரன்சியில் 'எலான் மஸ்க்’-களின் ஆதிக்கம்

இன்றைய நிலவரப்படி உலகில் அதிகமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களுக்குத் தான் முதலிடம்
மெய்நிகர் வணிகம் 3: கிரிப்டோகரன்சியில் 'எலான் மஸ்க்’-களின் ஆதிக்கம்
மெய்நிகர் வணிகம் 3: கிரிப்டோகரன்சியில் 'எலான் மஸ்க்’-களின் ஆதிக்கம்

கிரிப்டோ கரன்சி வணிகத்தை பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தவர்கள் எப்படி அணுகுகிறார்கள் ?

இன்றைய தொழில்நுட்ப காலத்தை வைத்துக்கொண்டு சிறப்பான செயல்திட்டம் இருந்தால் மக்களிடம் வெகு விரைவில் சென்று விடலாம். பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மட்டும் நம் அறைக்கதவைத் தட்டுவதில்லை பல வர்த்தக ஜாம்பவான்களும் தங்களுடைய நேர்த்தியான ’ஐடியா’க்களால் நம்மிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். அமேசான் போன்ற வர்த்தக நிறுவனங்களும் ,உணவு வினியோகம் போன்ற சேவை நிறுவனங்களும் இதில் அடக்கம்.

இந்த நிறுவனங்களையெல்லாம் ஒழுங்குப் படுத்தி லாபம் ஈட்டி , அரசிற்கு வருவாய் செலுத்தும் அதன் உரிமையாளர்கள் இந்த கிரிப்டோகரன்சி வணிகத்தை எப்படி அணுகுகிறார்கள்?

அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபெசாஸிடம் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வி ‘சொந்தமாக கிரிப்டோகரன்சிகளை வைத்திருக்கிறீர்களா இல்லை அதில் முதலீடு செய்திருக்கிறீர்களா? என்பது தான். ஆனால், இன்றுவரை தனக்கு கிரிப்டோகரன்சிகளின் மீது பெரிய ஆர்வமும் முதலீடு செய்கிற எண்ணமும் இல்லை என்றே கூறிவருகிறார். இருப்பினும் , அமெரிக்காவில் இத்தனை பில்லியன் டாலர்கள் முதலீடு என்பது மாத சம்பளம் வாங்குபர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. பெருமுதலாளிகளின் முதலீடுகள் இல்லாமல் இது இத்தனை தூரம் வளர சாத்தியேமே இல்லை எனும் போது பலரும் அதை மறுத்து வருகிறார்கள். 

எலான் மஸ்க்கின் திட்டம்

நவீன தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்படும் பெயர் எலான் மஸ்க். மிகக்குறைந்த வயதிலேயே ’ஸ்பேஸ் எக்ஸ்’ என்கிற விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நிறுவி விண்வெளி சார்ந்த ஆய்வுகளிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறார். இவர் தலைமையின் கீழ் செயல்படும் டெஸ்லா நிறுவனம்  தற்போது கிரிப்டோகரன்சி நாணயங்களில் ஒன்றான ‘டோஜ் காய்ன்’-னில் முதலீடு செய்ய இருக்கிறது என அறிவித்ததும் உடனடியாக அதன் மதிப்பு ஒரு சில நிமிடங்களிலேயே 25% வரை அதிகரித்து விற்பனையானது.

இந்த விவகாரத்தில் அடிக்கடி சர்ச்சையாகும் எலான் மஸ்க், இது போல் அந்த நாணயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் அதன் மதிப்பு உயரும். ஒரு வணிகத்தில் முதலீட்டின் அடிப்படையில் மதிப்பு உயரும் போது கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் தலைகீழாக பெரும் தொழில்முனைவோர்களின் சொற்களை நம்பியே அதன் அடுத்த நொடி நகர்ந்து கொண்டிருக்கிறது.


இந்தியாவில் முதலீட்டாளர்கள்:

சமீபத்தில் வெளியான ஒரு தகவலில் இன்றைய நிலவரப்படி உலகில் அதிகமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களுக்குத் தான் முதலிடம் என்றும்  கிட்டதட்ட 10 கோடி பேர் இந்த வணிகத்தில் ஈடுபடுவதாகவும் 20,000 கோடிகளுக்கு மேல் கிரிப்டோவில் முதலீடு செய்து வருகிறார்கள் எனவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இத்தகவல் முழுமையான ஆதரங்களின் அடிப்படையில் உருவானவை அல்ல.

இருப்பினும், அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வணிகத்தை செயல்படுத்தும் செயலிகளின் முதலீட்டு விவரங்கள் கூறுகின்றன. சாமானியர்களை அதிகம் கொண்ட தேசத்தில் பங்குச் சந்தையே பெரிய அளவில் மக்களிடம் போய் சேராதபோது கிரிப்டோவின் வளர்ச்சி மட்டும் எப்படி சாத்தியமானது ? 

மஹிந்தரா குழுமத்தின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திரா தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யவில்லை என்றும் தன்னிடம் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். அதற்கு என்ன அர்த்தம்? நிச்சயம் தனிநபர்களின்   முதலீடுகள் இத்தனை ஆயிரம் கோடிகளை அடையே வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவே பல அரசியல்வாதிகள் தொழில்முனைவோர்கள் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இறுதியாக , நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில் இந்தியாவில் கிரிப்டோ தடை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மசோதா நிறைவேறாமல் முடிந்தது. 

ஏன் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்கிற காரணங்களில் ஒன்று இந்த வணிகத்தில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாக அரசிற்கு தெரியாமல் இருப்பது. வரும்காலங்களில் தடை அல்லது நெறிமுறைப்படுத்தப்பட்ட கிரிப்டோ வணிகம் இயங்கலாம். ஆனால், வெளிப்படையாக இத்தனை கோடிகளை முதலீடு செய்திருக்கிறேன் என சொல்லாத இந்திய எலான் மஸ்க்குகள் இருக்கும் வரை சாமானியர்களின் முதலீட்டிற்கு எப்போதும் ஆபத்துதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com