
பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 372 புள்ளிகளை இழந்தது. இதற்கு, நிதி, ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர் கொண்டதே முக்கிய
காரணம்.
உள்நாட்டு பெரு நிறுவனங்களின் காலாண்டு தரவுகள் வலுவாக இருந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது ஆகியவற்றால் உள்நாட்டு சந்தை ஆதாயத்துடன் தொடங்கியது. ஆனால், ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் எதிர்மறையாக இருந்ததைத் தொடர்ந்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகலில் காணாமல் போனது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் லாப நோக்கு விற்பனையை எதிர்கொண்டதால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1,705 பங்குகள் விலை வீழ்ச்சி:
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,463 நிறுவனப் பங்குகளில் 1,612 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,705 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 460 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.
73 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.88 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.251.04 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு: காலையில் 323.49 புள்ளிகள் கூடுதலுடன் 54,210.10-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,211.22 வரை மேலே சென்றது. பின்னர், 53,455.26 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 372.46 புள்ளிகள் (0.69%) குறைந்து 53,514.15-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் நிலையற்ற தன்மையில் காணப்பட்டது.
இன்டஸ்இண்ட் பேங்க் கடும்
சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், தனியார் வங்கியான இன்டஸ் இண்ட் பேங்க் 3.42 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க் பங்குகளும்
குறைந்த விலைக்கு கைமாறின. மேலும், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்டெக், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் 1 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன.
ஹெச்யுஎல் முன்னேற்றம்: அதேசமயம், செவ்வாய்க்கிழமை பலத்த அடி வாங்கிய ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) 1.97 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஏஷியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், சன்பார்மா, என்டிபிசி உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் உயர்ந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 92 புள்ளிகள் வீழ்ச்சி:
தேசிய பங்குச் சந்தையில் 867 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,061 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி "50' பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. வர்த்தக முடிவில் நிஃப்டி 91.65 புள்ளிகள் (0.57%) குறைந்து 15,966.65-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 69.90 புள்ளிகள் கூடுதலுடன் 16,128.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,140.00 வரை மட்டுமே உயர்ந்தது. பின்னர்,15,950.15 வரை கீழே சென்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...