தள்ளாடிய சந்தையில் மேலும் 185 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் புதன்கிழமையும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தள்ளாடிய சந்தையில் மேலும் 185 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் புதன்கிழமையும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆரம்ப ஆதாயங்களை தக்கவைக்கத் தவறியதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 185 புள்ளிகளை இழந்தது.
 லாபப் பதிவு: உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. 2023 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி அதிகரித்து வரும் கவலைகள் ஆகியவற்றின் காரணமாக சந்தையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், 90% ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடைவிதிக்க ஆயத்தமாகி வருவதால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் சந்தையில் லாபத்தைப் பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தினர்.
 வளர்ச்சி மதிப்பீடு: இந்தியப் பொருளாதாரம் 2022 நிதியாண்டில் 8.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால், 2023-இல் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரண்டாவது நாளாக சந்தை சரிவுடன் முடிந்தது. இருப்பினும், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு நல்ல ஆதரவு இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 1,775 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,462 நிறுவனப் பங்குகளில் 1,775 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,555 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 132 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 69 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 38 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.257.03 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,003.56 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 இரண்டாவது நாள் சரிவு: காலையில் 21.86 புள்ளிகள் கூடுதலுடன் 55,588.27-இல் தொடங்கிய
 சென்செக்ஸ், அதிகபட்சமாக 55,791.49 வரை உயர்ந்தது. பின்னர், 55,091.43 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் மேலும் 185.24 புள்ளிகளை (0.33%) இழந்து 55,381.17-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சென்செக்ஸ் ஏற்ற, இறக்கத்துடன் நிலையற்ற தன்மையில் காணப்பட்டது.
 சென்செக்ஸில் 20 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி :
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் பிரபல முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே 2.99 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 2.86 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின்சர்வ், சன்பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்டவை 1.50 முதல் 2.50 சதவீதம் வரை குறைந்தன.
 மேலும், டிசிஎஸ், மாருதி சுஸுகி, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 எம் அண்ட் எம் முன்னேற்றம்: அதேசமயம், பிரபல டிராக்டர் உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் இரண்டாவது நாளாக 1.32 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
 நிஃப்டி 62 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,022 பங்குகள் ஆதாயம் பெற்றன. 909 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 9.55 புள்ளிகள் கூடுதலுடன் 16,594.40-இல் வர்த்தகத்தை தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,649.20 வரை உயர்ந்தது. பின்னர், 16,438.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 61.80 புள்ளிகளை (0.37%) இழந்து 16,522.75-இல் நிலைபெற்றது.
 ஐடி, பார்மா, ரியால்ட்டி குறியீடுகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் ஐடி, பார்மா, ஹெல்த்கேர், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.30 முதல் 0.70 சதவீதம் வரை உயர்ந்தன.
 தொடரும் எல்ஐசி சரிவு!
 ண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலான எல்ஐசி பங்குகள் விலை புதன்கிழமையும் 0.17 சதவீதம் குறைந்து ரூ.809.95-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.811.40-இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.817.45 வரை உயர்ந்தது.
 பின்னர் ரூ.808.50 வரை கீழே சென்றது. மும்பை பங்குச் சந்தையில், 0.12 சதவீதம் குறைந்து ரூ.810.55-இல் நிலைபெற்றது. பட்டியலான தினத்திலிருந்து இதுவரை இரண்டு நாள்கள் மட்டுமே நேர்மறையாக முடிந்துள்ள எல்ஐசி பங்குகள், ரூ.800-என்ற நிலையில், நல்ல ஆதரவு பெறும். அதே சமயம், ரூ.798-ஐ பிரேக் செய்யும் பட்சத்தில் அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தொழில் நுட்ப ரீதியாகக் கணித்துள்ளனர்.
 வரலாற்றுச் சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு
 ந்நியச் செலாவணி சந்தையில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.71-ஆக சரிந்தது. இந்த நிலையில், புதன்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு பாதாள சரிவிலிருந்து மீண்டு 21 காசு உயர்ந்து 77.50-இல் நிலைத்தது.
 கச்சா எண்ணெய் பீப்பாய் 117.73 டாலர்
 ரோப்பிய யூனியன் ரஷியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலால் சர்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.84% அதிகரித்து 117.73 டாலருக்கு வர்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com