
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ரூ.4,400 கோடியில் மெத்தனால் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஈடுபடவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு பயனுள்ள வேதிப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் திரவத்தை பழுப்பு நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதற்கான ஆய்வுப் பணிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், இதுகுறித்த ஆய்வறிக்கைக்கு நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, நாள் ஒன்றுக்கு 1,200 டன் மெத்தனால் திரவம் தயாரிக்கும், ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் உற்பத்தித் திறனுள்ள ஆலையை ரூ.4,400 கோடியில் அமைக்கும் பணிகளை என்எல்சி மேற்கொள்ளவிருக்கிறது.
சுரங்கம், மின் உற்பத்தி பணிகள் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் என்.எல்.சி.யால் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டமானது நாட்டில் புதிய முயற்சியாகும். புதிய ஆலை வரும் 2027-ஆம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றவும், மேலாண்மைப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தை என்எல்சி பணியமர்த்தியுள்ளது.
உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத் தொகை வழங்கும் திட்டங்களுக்கான பட்டியலில் இந்தத் திட்டத்தை இணைக்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் என்எல்சி கோரிக்கை வைத்தது. அதன்படி, இங்கு தயாரித்து விற்கப்படும் மெத்தனால் திரவத்துக்கு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டது.