பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக மந்தநிலை: சென்செக்ஸ் மேலும் 152 புள்ளிகள் இழப்பு

பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு
பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக மந்தநிலை: சென்செக்ஸ் மேலும் 152 புள்ளிகள் இழப்பு

பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 152 புள்ளிகளை இழந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் முடிவையொட்டி, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையற்றதாக இருந்தது. காலையில் ஏற்றம் காணப்பட்டாலும், இரண்டாவது பாதியில் விற்பனை அழுத்தமானது குறியீடுகளை எதிர்மறையாக கொண்டு சென்றது. உலகளாவிய ரீதியில், முதலீட்டாளர்கள் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதன் காரணமாக பங்குகளை வாங்குவதற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 1,746 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,442 நிறுவனப் பங்குகளில் 1,746 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,561 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 135 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 55 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 105 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.244.75 லட்சம் கோடியாக இருந்தது.
 0.29 சதவீதம் குறைந்த சென்செக்ஸ்: காலையில் 43.16 புள்ளிகள் குறைந்து 52,650.41-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 52,867.73 வரை உயர்ந்தது. பின்னர், வர்த்தக நேர முடிவில் 52,493.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 152.18 புள்ளிகள் (0.29 சதவீதம்) குறைந்து 52,541.39-இல் நிலைபெற்றது. காலை வர்த்தகத்தில் வலுப்பெற்றிருந்த சென்செக்ஸ், இரண்டாவது பாதியில் விற்பனை அழுத்தம் அதிகரித்து தொடர்ந்து 4-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.
 பஜாஜ் ஃபின்சர்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில், கடந்த இரண்டு நாள்களாக சரிவில் இருந்த பஜாஜ் ஃபின்சர்வ் 4.23 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஏஷியன் பெயிண்ட், எஸ்பிஐ, எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டீஸ் லேப், மாருதி சுஸýகி உள்ளிட்டவை 0.50 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 எல்ஐசி பங்குகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை புதன்கிழமை 2.11 சதவீதம் உயர்ந்து ரூ.688.75-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.681.00- இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.709.70 வரை உயர்ந்தது. பின்னர், ரூ.679.10 வரை கீழே சென்றது.
 இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தக முடிவில் 2.41 சதவீதம் உயர்ந்து ரூ.690.45-இல் நிலைபெற்றிருந்தது. பட்டியலான தினத்தில் இருந்து சரிவில் இருந்த எல்ஐசி பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது.
 என்டிபிசி சரிவு: அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 2.02 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1 முதல் 1.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்டஸ்இண்ட் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 40 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,038 பங்குகள் ஆதாயம் பெற்றன. 878 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 2.85 புள்ளிகள் குறைந்து 15,729.25-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,783.65 வரை உயர்ந்தது. பின்னர், 15,678.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 39.95 புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைந்து 15,692.15-இல் நிலைபெற்றது.
 ஆட்டோ, பார்மா குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.92 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பார்மா, ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் சிறிதளவு உயர்ந்தன. அதே சமயம், எஃப்எம்சிஜி, ஐடி, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் வரை குறைந்தன. பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com