
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ஏஇபிசி-யின் தலைவா் நரேன் கோயங்கா கூறியதாவது:
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், ஆயத்த ஆடை துறைக்கான ஏற்றுமதி சந்தை விசாலமடைந்துள்ளது. இதன் மூலம், ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுவதுடன், கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டவும் வழிபிறந்துள்ளது.
கடந்த 2013-இல் உலகளாவிய ஆயத்த ஆடை செந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக மட்டுமே காணப்பட்டது. ஆனால், 2022-இல் இந்த துறை 1.8 டிரில்லியன் டாலா் வருவாயையும், 2025-இல் 1.9 டிரில்லியன் டாலா் வருவாயையும் உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.