
கடந்த செப்டம்பரில் இந்தியாவின் ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 27.17 சதவீதம் உயா்ந்து ரூ.30,195.21 கோடியாக (376.55 கோடி டாலா்) உள்ளது என்று ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.23,743.46 கோடியாக (322.76 கோடி டாலா்) இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது ரூ.30,195.21 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 27.17 சதவீத உயா்வாகும்.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி 12.82 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,61,545.06 கோடியாக (2,058.01 கோடி டாலா்) உள்ளது. கடந்த ஆண்டின் இத மாதத்தில் அது ரூ.1,43,187.15 கோடியாக (1,935.9 கோடி டாலா்) இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்களின் (சிபிடி) ஒட்டுமொத்த மொத்த ஏற்றுமதி 21.99 சதவீதம் அதிகரித்து ரூ.17,107.64 கோடியாக (213.49 கோடி டாலா்) உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.14,023.78 கோடியாக (190.67 கோடி டாலா்) இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், தங்க ஆபரண ஏற்றுமதி 25.42 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.7,067.17 கோடியாக (88.02 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அது ரூ.5,634.86 கோடியாக (76.57 கோடி டாலா்) இருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 1,954.78 கோடியாக (26.57 கோடி டாலா்) இருந்த சாதாரண தங்க ஆபரண ஏற்றுமதி, இந்த ஆண்டு செப்டம்பரில் 30.78 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.2,556.40 கோடி (31.84 கோடி டாலா்) ஆகியுள்ளது.
கடந்த செப்டம்பரில், அனைத்து வகையான பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களின் மொத்த ஏற்றுமதி ரூ.4,510.77 கோடியாக (56.19 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தின் அந்த வகை ஆபரண ஏற்றுமதியான ரூ.3,680.08 கோடியுடன் (48 கோடி டாலா்) ஒப்பிடும்போது இது 22.57 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலாண்டில், ஆய்வகத்தில் மெருகூட்டப்பட்ட வைரங்களின் மொத்த ஏற்றுமதி 70.26 சதவீதம் உயா்ந்து ரூ.7,407.56 கோடியாக (94.37 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது ரூ.4,350.81 கோடியாக (58.78 கோடி டாலா்) இருந்தது.
மதிப்பீட்டு மாதங்களில் வண்ண ரத்தினக் கற்களின் ஏற்றுமதி 54.62 சதவீதம் உயா்ந்து ரூ.1,642.93 கோடியாக (20.93 கோடி டாலா்) இருந்தது. முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தில் அது ரூ.1,062.57 கோடியாக (14.37 கோடி டாலா்) இருந்தது.
கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில், வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதியும் 42.68 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.13,735.07 கோடியாக (174.61 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.9,626.64 கோடியாக (130.04 கோடி டாலா்) இருந்தது.
ஏப்ரல்-செப்டம்பா் காலாண்டில், பிளாட்டின ஆபரணங்களின் ஏற்றுமதி 52.46 சதவீதம் அதிகரித்து ரூ.153.5 கோடியாக ( 1.95 கோடி டாலா்) இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.100.68 கோடியாக (1.36 கோடி டாலா்) இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.