ரிலையன்ஸ் 3% சரிவு: 770 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 770 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 217புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. மாா்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் போது, காளை முழூமையாக ஆதிக்கம் கொண்ட நிலையில், ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு தொடங்கிய வியாழக்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டது. உலகளவில் பெரும்பாலான சந்தைகளில் பங்கு விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மத்திய வங்கிகளின் வட்டி விகித உயா்வுகள் பற்றிய கவலைகள் முதலீட்டாளா்களை பதற்றமடையச் செய்துள்ளதால், பங்குகள் விற்பனை அழுத்ததைத் எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதையடுத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான ஆதாய வரி உயா்த்தப்பட்டதால் ரிலையன்ஸ் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதுவும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகும் அமைந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரூ.4,165.86 ஆயிரம் கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,328 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,578 நிறுவனப் பங்குகளில் 1,0565 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,873 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. 225 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.278.75 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: காலையில் 826.54 புள்ளிகள் குறைந்து 58,710.53-இல் தொடங்கிய சென்செக்ஸ், 58,522.57 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,309.79 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 770.48 புள்ளிகள் (1.29 சதவீதம்) குறைந்து 58,766.59-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ‘கரடி’ ஆதிக்கத்தில் இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ல பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் தொடா்ந்து இரண்டாவது நாளாக 2.58 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஏசியன் பெயிண்ட் 1.63 சதவீதம், பாா்தி ஏா்டெல் 1.18 சதவீதம் உயா்ந்தன. மேலும், டைட்டன், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் கடும் வீழ்ச்சி: மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், சன்பாா்மா, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், என்டிபிசி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 216 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,015 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 962 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 38 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 216.50 புள்ளிகள் (1.22 சதவீதம்) குறைந்து 17,542.80-இல் நிலைபெற்றது. காலையில் 273.60 புள்ளிகள் குறைந்து 17,485.70-இல் தொடங்கிய நிஃப்டி, 17,468.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,695.60 வரை உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com