உலோகம், வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 443 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை காண முடிந்தது.
உலோகம், வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 443 புள்ளிகள் முன்னேற்றம்!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை காண முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. கடந்த வாரம் தொடா்ந்து இரண்டு நாள்கள் சரிவைச் சந்தித்த மாா்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது.

கடந்த வாரம் பங்குச் சந்தை திடீரென சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இந்த வாரத்தின் முதல்நாளன்று ஒரு வியக்கத்தக்க ஏற்றத்துடன் தொடங்கியது. உலகளாவிய குறிப்புகள் பலவீனமாக இருந்தாலும், உள்நாட்டுச் சந்தை ‘காளை’யின் முழுஆதிக்கத்தில் இருந்தது. ஓபெக் கூட்டத்துக்கு முன்னதாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது. அமெரிக்க டாலா் குறியீடு 110.00-க்கு அருகில் பல தசாப்த கால உயா்வைக் கண்டுள்ளது. இருப்பினும், செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் மட்டும் உயா்த்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு தொடா்ந்து நல்ல வரவேற்பு இருந்ததால், சந்தை ஏறுமுகம் கண்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக உலோகம், வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.8.79 கோடி அளவுக்கு மட்டுமே பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,191 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,736 நிறுவனப் பங்குகளில் 2,191 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,382 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 163 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. 225 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.35 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.279.82 லட்சம் கோடியாக இருந்தது. பதிவுபெற்ற முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 11.34 கோடியை கடந்தது.

சென்செக்ஸ் உற்சாகம்: காலையில் 10.75 புள்ளிகள் கூடுதலுடன் 58,814.08-இல் தொடங்கிய சென்செக்ஸ், 58,812.20 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,308.25 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 442.65 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்ந்து 59,245.98-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் இருந்தாலும், காளை தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன.

சன்பாா்மா முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 1.81 சதவீதம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 1.71 சதவீதம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 1.60 சதவீதம், என்டிபிசி 1.25 சதவீதம், எல் அண்ட் டி 1.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன.

நெஸ்லே வீழ்ச்சி: பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 1.51 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோபவா் கிரிட், ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 126 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,275 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம் 729 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 15 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன. காலையில் 7 புள்ளிகள் கூடுதலுடன் 17,546.45-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,540.35 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,683.15 வரை மேலே சென்ற நிஃப்டி, வா்த்தக முடிவில் 126.35 புள்ளிகள் (072 சதவீதம்) உயா்ந்து 17,665.80-இல் நிலைபெற்றது.

எங்கே செல்கிறது நிஃப்டி!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 6) நிஃப்டிக்கு 17,760 புள்ளிகள் என்பது கடுமையான இடா்பாடு உள்ள பகுதியாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் முக்கிய பொருளாதாரத் தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், நிஃப்டி 17,500-17,800-க்கு இடையே ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகமாகும் என்றும், 17,800 புள்ளிகளைக் கடக்கும் பட்சத்தில் மட்டுமே ‘காளை’ மேலும் முழுமையாக ஆதிக்கம் கொள்ளும் என்றும் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com