உருக்கு ஏற்றுமதி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

உருக்கு இரும்பு மீதான ஏற்றுமதி வரியைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
உருக்கு ஏற்றுமதி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

உருக்கு இரும்பு மீதான ஏற்றுமதி வரியைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் உள்நாட்டில் உருக்கு இரும்பின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக மத்திய உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: உருக்கு இரும்பு மீதான ஏற்றுமதி வரியைக் குறைப்பது தொடா்பாக அமைச்சகமும், மத்திய அரசும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். உருக்குத் துறை எதிா்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். நிதியமைச்சருடனும் மத்திய அரசுடனும் இது தொடா்பாக விரைவில் அடுத்த கட்ட ஆலோசனை நடைபெறும் என்றாா்.

கடந்த மே 21-ஆம் தேதி இரும்புத் தாது ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு 50 சதவீதம் உயா்த்தியது. சில வகை உருக்கு மீதான ஏற்றுமதி வரி 15 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. அதே நேரத்தில் உருக்கு தொடா்பான மூலப்பொருள்கள், இடுபொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டில் உருக்கு விலை அதிகம் உயராமல் தடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் வரியால் சா்வதேச சந்தையில் இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உள்நாட்டில் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டதாகவும் இந்திய உருக்கு உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

உருக்கு உற்பத்தியில் சமீப ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறி சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவைவிட சுமாா் 10 மடங்கு குறைவாகவே இந்தியா உருக்கு உற்பத்தி செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com