
பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 44.35 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்ந்து 17,813.60-இல் நிலைபெற்றது.
அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகள் பலவீனமாக இருந்ததால் உள்நாட்டுச் சந்தை தயக்கத்துடன் தொடங்கியது. வங்கி, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. மெட்டல் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், சென்செக்ஸ் குறியீட்டில் நல்ல திறன் கொண்ட எல் அண்ட் டி, இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு சந்தை வலுப்பெற உதவியது. இருப்பினும், அந்நிய நிதி வெளியேற்றம் லாபத்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் உள்படுத்தியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சிறிதளவு உயர்வு:
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.71 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.267.74 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்களன்று ரூ.407.35 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 3-ஆவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 42.73 புள்ளிகள் குறைந்து 60,087.98-இல் தொடங்கி 59,954.91 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 60,362.79 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 169.87 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்ந்து 60,300.58-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 22 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,119 பங்குகள் ஆதாயம் பெற்றன. 896 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய
நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.