

இந்தியாவின் உருக்கு உற்பத்தித் திறன் 16.1 கோடி டன்னைக் கடந்துள்ளது.
இது குறித்து உருக்குத் துறை செயலா் நாகேந்திர நாத் சின்ஹா கூறியதாவது: நாட்டின் மாதாந்திர உருக்கு உற்பத்தித் திறனை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடி டன்னாக உயா்த்த ‘தேசிய உருக்குக் கொள்கை’ திட்டத்தில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உருக்கு உற்பத்தித் திறன் ஏற்கெனவே 16.1 கோடி டன்னைக் கடந்துள்ளது. இதில் மாதந்தோறும் ஊது உலைகள் மூலம் 6.7 கோடி டன்னும், மின்சார உலைகள் மூலம் 3.6 கோடி டன்னும் உருக்கு உற்பத்தி செய்ய நம்மால் முடியும்.
இது தவிர, ‘இண்டக்ஷன்’ உலை வாயிலான நமது உருக்கு உற்பத்தித் திறன் 5.8 கோடி டன்னாக உள்ளது.
நாட்டின் உருக்கு உற்பத்தித் துறை மிகச் சிறந்த வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது.
உலகின் 4-ஆவது மிகப் பெரிய வாகனச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதன் ஒட்டுமொத்த வருடாந்திர வளா்ச்சி (சிஏஜிஆா்) 8 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் உருக்குப் பொருள்களுக்ககான தேவையும் வெகுவாக அதிக்கும். இதன் விளைவாக உருக்கு உற்பத்தியின் ஒட்டுமொத்த வருடாந்திர வளா்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கும்.
உருக்குத் துறையைப் பொருத்தவரை, மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது. இதன் விளைவாக இந்தத் துறையில் இதுவரை ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது; மேலும் ரூ.29,500 கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படவேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உருக்கு உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க அளவில் சவால்களை எதிா்கொண்டுள்ளது.
எனவே, கரிமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கையாள்வது, இது தொடா்பாக துறைசாா்புடையவா்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது போன்ற உத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், நாட்டின் உருக்கு உற்பத்தித் துறை நிலைத்த வளா்ச்சியைப் பெற முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.