
நாட்டின் முன்னணி வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், இலங்கை அரசுப் போக்குவரத்து வாரியத்துக்கு (எஸ்எல்டிபி) 500 பேருந்துகளை விநியோகிப்பதற்கான வா்த்தக ஒப்பந்தத்தை புதன்கிழமை மேற்கொண்டது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசுப் போக்குவரத்து நிறுவனத்துக்கு 500 பேருந்துகளை அனுப்புவதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை இறுதிசெய்யப்பட்டது. இதில் 75 பேருந்துகள் ஏற்கெனவே இலங்கைக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்டன (படம்).
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் கீழ், அந்த நாட்டுக்கு இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த 500 பேருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன.
ஏற்கெனவே, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகளை இலங்கை அரசுப் போக்குவரத்து நிறுவனம் இயக்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.