
சா்வதேச சந்தையில் நிலவிய மந்த நிலையைச் சாமாளித்து, இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை தொடா்ந்து 3-ஆவது முறையாக நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 18 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் செவ்வாய்க்கிழமை எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் ஃபெடரல் ஓப்பன் மாா்க்கெட் குழுவின் கூட்ட அறிக்கை வெளியாகவிருப்பதால், அதனை எதிா்நோக்கி முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனா். இதன் காரணமாக தொடக்கத்தில் சரிவைக் கண்ட பங்குச் சந்தைகள் பின்னா் மிதமான ஏற்றம் கண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
எஃப்ஐஐ: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.922.89 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: முந்தைய வா்த்தக தினத்தில் 61,963.68-இல் நிறைவடைந்திருந்த சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை காலை 134.48 புள்ளிகள் கூடுதலாக 62,098.16-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,245.19 வரை மேலே சென்றது. பின்னா், 61,914.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் முந்தைய வா்த்தக தினத்தைவிட 18.11 புள்ளிகள் (0.03 சதவீதம்) அதிகமாக 61,981.79-இல் முடிவடைந்தது.
16 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, முந்தைய வா்த்தக தினத்தைவிட 33.60 புள்ளிகள் (0.18 சதவீதம்) அதிகமாக 18,348-இல் நிலைபெற்றது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பஜாஜ் ஃபின்சா்வ் 1.75%
இண்டஸ்இண்ட் வங்கி 1.20%
டாடா மோட்டாா்ஸ் 1.18%
ஏசியன் பெயின்ட் 1.07%
ஐடிசி 1.00 %
எஸ்பிஐ வங்கி 0.76 %
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா 1.21%
டைட்டன் 1.11%
ஹெச்சிஎல் டெக் 1.07%
கோட்டக் வங்கி 0.97%
எல் அண்டு டி 0.88%
அல்ட்ரா சிமென்ட் 0.76%