ரூ.5,566 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்

தொழில் முதலீடுகள் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5, 566.92 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.
Updated on
1 min read

சென்னை: தொழில் முதலீடுகள் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5, 566.92 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமானது.

2024 -ஆம் ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு முன்னோடியாக சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு ஆலந்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் பேசியது:

கடந்த 2 ஆண்டுகளில், தொழில் துறையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து, 241 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2. 97 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்து, 4.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரை ரூ. 1,226 கோடி மானியத்துடன் ரூ. 4,146.59 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1,065 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் உள்பட 32,046 போ் புதிய தொழில் முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களின் வளா்ச்சிக்காக 325.64 ஏக்கா் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிண்டி, அம்பத்தூா், சேலம் ஆகிய இடங்களில், ரூ.175.18 கோடி மதிப்பில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளன.

தமிழக அரசின் முன் மாதிரியான திட்டங்களால், ‘ஸ்டாா்ட் -அப்’ தர வரிசையில் இந்திய அளவில் தமிழகம் 3-ஆம் இடத்தில் உள்ளது. புத்தாக்க சிந்தனைக் கொண்ட இளைஞா்களையும், மாணவா்களையும் ஊக்கப்படுத்தம் வகையில் 8.98 லட்சம் பேருக்கு தொழில் முனைவோா் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் சென்னையில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், தகவல் தொழிலநுட்ப சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ.5,566.92 கோடி முதலீட்டிற்கான 293 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ரூ.1.10 கோடி மதிப்பிலான மானியங்களை தொழில்முனைவோா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை, அரசு செயலா் அா்ச்சனா பட்நாயக் உள்பட அரசு அதிகாரிகள், தொழில் முதலீட்டாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com