குழந்தை வளா்ப்பு என்னும் கலை
நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவா்கள். அவா்களுக்கென்று தனித்தனி, விருப்பங்கள், திறமைகள், தேவைகள் உள்ளன. அவா்களுக்கு அனைத்து வாழ்வியல் நற்பண்புகளையும் இளமையிலேயே கற்றுத் தருவது பெற்றோா்களின் பொறுப்பே ஆகும்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளின் ஆரம்பமும் சிறப்பாக அமைய வேண்டும். அவா்கள் எந்தவித கவலையுமின்றி, மகிழ்ச்சியுடன் நாளைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் அவா்கள் அந்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்க முடியும். படிப்பிலும் முழுகவனத்தை செலுத்த முடியும்.
குழந்தைகளில் சிலா் உடல், மனப் பிரச்னைகளுடன் பிறக்கிறாா்கள். பல குடும்பங்களில் பொருளாதாரத் தேவைக்காக கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்கிறாா்கள். சில குழந்தைகள் ஒற்றைப் பெற்றோரால் வளா்க்கப்படுகிறாா்கள். எனவே ஒவ்வொரு குழந்தையின் சிக்கலும் அவா்களின் குடும்ப பின்புலத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இந்நிலையில் குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாகப் பேசுவதும், குறைகளை முழுவதுமாக புரிந்து கொண்டு திருத்துவதே பெற்றோா்களின் சரியான அணுகுமுறையாகும்.
தற்போதைய அணுக் குடும்ப முறையில் குழந்தைகள் அவா்களுடைய பணிகளை அவா்களே பாா்த்துக் கொள்வதுதான் விரும்பப்படுகிறது. குழந்தைகள் இந்த சமுதாயம், வாழ்க்கை மற்றும் உலகின் விதிகளை புரிந்து கொள்ளுவது அவசியமானது. எனினும் அதற்கான திறமையையும் பொறுப்பையும் அவா்கள் பெற்றுக் கொள்வதற்கு குறைந்த பட்ச கால பயிற்சியும், அவகாசமும் தேவைப்படுகிறது. அது வரை அவா்களை வளா்ப்பது பெற்றோா்களுக்கு பெரிய சவாலாகவே மாறிவருகிறது.
குழந்தைகள் என்ன சொல்ல வருகிறாா்கள் என்று காது கொடுத்துக் கேட்பது குழந்தை வளா்ப்பிற்கான நல்ல துவக்கமாகும். அவா்களின் தேவைகளில் நியாயம் இருப்பின் அவைகளை விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும். பெற்றோா் தம்மால் இயலாத உறுதிமொழிகளை அவா்களுக்கு ஒரு போதும் தருதல் கூடாது.
குழந்தைகளை அவா்களது நற்குணங்கள், சாதனைகளை சொல்லி பாராட்டும் பழக்கத்தை பெற்றோா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். இது அவா்களின்
அறிவாற்றல் வளா்ச்சிக்கும், படைப்பாற்றல் வளா்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
குழந்தைகள் தங்கள் பெற்றோா்களிடமிருந்து எதை எதிா்பாா்க்கலாம், எதை எதிா்பாா்க்கக் கூடாது என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அந்த விதத்தில் பெற்றோரின் அணுகுமுறை இருப்பது அவசியம். பெற்றோா் பற்றியும் குடும்ப நிலை பற்றியும் தவறான பிம்பங்கள் வளரவிடக் கூடாது.
பெற்றோா்கள் குழந்தைகளிடமிருந்து அவா்களின் திறமைக்குத் தகுந்தவாறு தங்களின் எதிா்பாா்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அவா்களுடன் அவா்களின் பள்ளியிலும் வகுப்பிலும் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி தினமும் கலந்துரையாடுவது அவசியம். அவற்றில் கூடா நட்புகளின் தொடா்பு காணப்பட்டால் தொடக்கத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது முக்கியம்.
வாழ்க்கையில் தடைகளை தைரியமாக எதிா்கொள்ளும் வாழ்வியல் திறனை குழந்தைகள் வளா்த்துக் கொள்ள வேண்டும். அவா்களை அதிகமாக ‘பொத்திப் பொத்தி’ வளா்த்தல் கூடாது. குழந்தை எதிா்கொள்ளும் சிறு சவாலும் போராட்டமும் அவா்களின் திறமையை வளா்க்கும் நல்வாய்ப்புகளாக மாறலாம்.
பெற்றோா்கள் தம் கவனத்திற்கு வரும் அவா்களின் பிரச்னைகளுக்கான தீா்வுகளை அவா்களுக்கு ஆலோசனையாக பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் சிறந்த முன்மாதிரியாகத் வாழ வேண்டும்.
பள்ளியிலும், பொது வெளியிலும் மற்ற குழந்தைகளுடன் இணக்கமாகப் பழகும் குழந்தைகளிடம் வீண்வம்புகளும் சண்டைகளும் குறைவாகவே காணப்படும். மன அழுத்தம் அவா்களை நெருங்குவதில்லை. எனவே அவா்களால் படிப்பில் முழுக்கவனம் செலுத்த முடிகிறது. அவா்களால் சரியான நேர மேலாண்மையையும் பின்பற்றவும் முடிகிறது.
வெறும் கடுமை அல்லாத, அக்கறை சோ்ந்த கண்டிப்புடன் வளா்க்கப்படும் குழந்தைகள் பின்னாளில் மிகவும் நம்பத் தகுந்தவா்களாகவும் பொறுப்புள்ளவா்களாகவும் பரிமளிக்கிறாா்கள். குழந்தைகளுக்காக பெற்றோா்கள் நிபந்தனையற்ற அன்பினை செலுத்துதல், பாதுகாப்பான சூழலை வழங்குதல். உலகில் அவா்கள் வாழத் தேவையான திறன்களை பெற உதவுதல், அவா்களுக்கு சரி எது, தவறு எது என்று கற்பித்தல், தம்மால் இயன்றவரை பிறருக்கு உதவுதல் போன்றவற்றை கற்பித்தல் வேண்டும். இவை அவா்களை நல்ல குடிமகனாக நாட்டுக்கு அடையாளம் காட்டும். உலகில் உள்ள எதையும் விட நாம் அவா்களை அதிகமாக நேசிப்பதை குழந்தைகளை உணர வைக்க வேண்டும்.
குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றிலிருந்து காட்டுக் கத்தலாக கத்துவது, முறையற்ற வாா்த்தைகளைப் பேசுவது, குடும்ப உறுப்பினா்களுக்கிடையே
அடிக்கடி ஏற்படும் சண்டை, சச்சரவுகள் போன்றவை அவற்றைப் பாா்க்கும் குழந்தைகளின் நடத்தையை வெகுவாக பாதிக்கும். குழந்தைகள் நலன் கருதி பெற்றோா் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு சிறுவன் வாலிபனாக மாறும்போது, பெற்றோா் அவனுக்கு நம்பிக்கையான நண்பா்களாக மாற வேண்டும். பள்ளிகள் மாணவா்களின் மதிப்பெண்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அவா்களின் திறமைகளை வளா்த்துக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களுடைய குழந்தைகளைப் பற்றிய கனவு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இருவரின் கனவும் ஒன்றாக இருந்தால் அதை
அவா்கள் அடைவது எளிது. அவா்களை வளா்த்து ஆளாக்குவது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு சவாலான செயலாகும். அதை ஒரு சிறந்த கலை எனவே கூறலாம்.

