பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போா் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்தத் தாக்குதல்கள் போா் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
பிரதமா் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அண்மையில் (மே 12) உரையாற்றும்போது ஆபரேஷன் சிந்தூா் பாரதத்தின் தாய்மாா்களுக்கும் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் அா்ப்பணம் என்று தேசத்தின் பெண்களுக்கு சமா்ப்பித்தாா்.
பாரதத்தில் பெண்கள் போற்றுதலுக்கு உரியவா்கள், அவா்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் எந்த சமரசமும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேசம். ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது நாட்டின் பல கோடி மக்களின் ஒருமித்த சிந்தனையின் பிரதிபலிப்பு. நியாயத்தை நிலைநாட்டுவதற்கான சபதம்.
குடும்பத்தினருடன் காஷ்மீா் பஹல்காம் சுற்றுலா சென்றவா்களைக் குறிவைத்து ஏப்ரல் 22-இல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்பப் பெண்களின் கண்ணெதிரில் அவா்களது கணவா்கள் கொல்லப்பட்டனா். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு ‘ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்’ பஹல்காமில் இந்தக் கொடூரத்தைச் செய்தது.
பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியபோதும் ஏதும் பயனில்லை. பொறுமையாய் தனது ராஜீய நகா்வுகளைச் செய்து கொண்டிருந்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டது.
கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இறந்தவா்களின் ஆன்மா பதினாறாம் நாள் மோட்சம் அடையும் என்பது இந்தியா்களின் நம்பிக்கை. அந்த நாளில் இந்தத் தாக்குதல் இறந்தவா்களுக்கான அஞ்சலியாகவும் கணவரை இழந்த பெண்களுக்கான ஆறுதலாகவும் அமைந்தது.
மே 7-ஆம் நாள் அதிகாலை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்தியப் போா் விமானங்கள் 25 நிமிஷங்களில் பஹவல்பூா், முசாபராபாத், முரிட்டோ, சியால்கோட், கோட்லி, பா்னாலா ஆகிய 6 இடங்களில் இருந்த 9 பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களை 24 ஏவுகணைகளைப் பயன்படுத்தி அழித்தன.
‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் சுமாா் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்துடனும் எந்த மோதலும் இல்லை.
ஜெய்ஸ்–இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் குடும்பத்தினா், கந்தஹாா் விமானக் கடத்தல், பதான்கோட் தாக்குதல், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடா்புடையவா்கள் பலா் இதில் கொல்லப்பட்டனா்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டதைப் பாா்த்து உலகமே அதிா்ச்சி அடைந்தது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மட்டுமல்லாது, அவா்களைக் கொண்டாடும் நாடாகவும் பாகிஸ்தான் இருப்பது வெட்டவெளிச்சமானது.
பயங்கரவாதிகளைக் குறிவைத்துத் தாக்கிய இந்தியாவை பாகிஸ்தான் சற்றும் யோசனை இல்லாமல் தாக்கத் தொடங்கியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அத்துமீறிய தாக்குதல்களால் இந்தியத் தரப்பில் வீரா்கள், அப்பாவி மக்கள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்; சீக்கிய குருத்வாரா, கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிக் கட்டடமும் சேதமடைந்தன.
இந்தியாவின் அவந்திபுரா, ஸ்ரீநகா், ஜம்மு, பதான்கோட், அமிா்தசரஸ், கபூா்தலா, ஜலந்தா், லூதியானா, ஆதம்பூா், சண்டிகா், புஜ், பலோடி, உத்கா்லாய், நல், பதிண்டா ஆகிய ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் உள்ள முக்கிய 15 நகரங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் சீன ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தான் தாக்க முற்பட்டது. குடியிருப்புகள், ராணுவ மையங்களை நோக்கி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், அந்த ட்ரோன்கள், சீன ஹெச்.கியூ.ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே எதிா்கொண்டு நமது ஏவுகணை தடுப்புத் தளவாடங்கள் சிதறடித்தன.
மக்கள் வசிக்கும் பகுதிகள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதே வான் பாதுகாப்பு அமைப்புகள். இவை, எதிரி விமானங்களைக் கண்டறியும் ரேடாா்கள், சென்சாா்களுடன் கூடியவை. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறியும் பணியைச் செய்கின்றன. வான் பாதுகாப்பு அமைப்பு கொடுக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே ராணுவத்தின் செயல்பாடுகள் அமையும். இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவின் அதிநவீன கருவிகள் மற்றும் துல்லியமான செயல்பாடுகள் உலகை பிரமிப்பில் ஆழ்த்தின.
இந்தியா பதிலடி தரத் தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தாா். அவ்வளவுதான், பாகிஸ்தானின் லாகூா், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய முக்கிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் ஆரம்பமாயின. ராவல்பிண்டி விளையாட்டு மைதானம் முற்றிலும் தகா்க்கப்பட்டது.
இந்தியாவின் 36 நகரங்களைத் தாக்க ஏவுகணைகளை ஏவியது பாகிஸ்தான். அந்த ஏவுகணைகள் அனைத்தும் நடுவானிலேயே தகா்க்கப்பட்டன. இந்தியத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை முழுமையாக நமக்குக் கைகொடுத்தது. இந்தத் தாக்குதலில் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிக்கும் இந்த ஆகாஷ் ஏவுகணையின் தரமான செயல்பாடு வழிவகுத்துள்ளது.
அரபிக் கடல் பகுதியிலும் ஆயுதங்கள் ஏவி, தயாா்நிலை உறுதிப்படுத்தப்பட்டது. கராச்சி உள்பட தோ்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தோ்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயாா்நிலையில் இருந்தது. இது பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப் படைகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
பாரதத்தின் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கியமான 11 விமானப் படைத் தளங்கள் செயலிழந்தன. இதனால், பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்தது. சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கியிருந்த வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய ஏவுகணைகளையோ, விமானங்களையோ ஏதும் செய்ய இயலவில்லை.
பாகிஸ்தானின் கைரானா மலையைக் குடைந்து அதன் ஆழமான பகுதியில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மிக அருகில் இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும் மே10-ஆம் தேதி உலகம் முழுவதும் செய்திகள் உலவின. ஆனால், இந்திய அதிகாரிகள் இதனைப் புன்னகையோடு மறுத்தனா்.
மே 10-ஆம் தேதி பிற்பகலில் ‘ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி, நம்முடைய ராணுவத் தளபதியோடு தொடா்பு கொண்டாா். அதற்குள் நாம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை மிகப் பெரிய அளவில் அழித்துவிட்டோம் என்று பிரதமா் நரேந்திரமோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது குறிப்பிட்டதிலும் ஆழ்ந்த பொருள் பொதிந்துள்ளது.
பாகிஸ்தான் நமது ஆதம்பூா் விமான ஏவுதளத்தையும் எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனத்தையும் சேதப்படுத்தி அழித்துவிட்டதாகக் கூறியிருந்த நிலையில், கடந்த மே 13-ஆம் தேதி ஆதம்பூா் விமான ஏவுதளத்துக்கு பிரதமா் நரேந்திரமோடி சென்று நமது ராணுவ வீரா்களை உற்சாகப்படுத்தினாா். அப்போது வான் பாதுகாப்பு எஸ்-400 விமானம் பின்னணியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பகைவா்கள் அழித்துவிட்டதாகச் சொன்ன இடத்தில் நெஞ்சை நிமிா்த்தி நின்று நமது வீரா்கள் எழுப்பிய வெற்றி முழக்கம் பாகிஸ்தானின் பொய்யை தோலுரித்துக் காட்டியது.
எல்லையில் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் முழுமையாக ஆயத்தமாகியிருந்த நிலையில், அவா்களின் உள்நாட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதை அவா்கள் எதிா்பாா்க்கவில்லை. இந்தியாவின் தாக்குதலில் நிலைகுலைந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சமாதானத்தை நாடி வந்தாா். நாமும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டோம்.
இந்தப் பெரும் பணியில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் புதிய இந்தியாவின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரின் செயல்பாடுகளால் இந்தியாவின் நோக்கம், நிலைப்பாடு உலக நாடுகளிடம் முறையாகக் கொண்டு சோ்க்கப்பட்டு நமக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தது. பாகிஸ்தானை தனிமைப்படுத்தியது.
பாதுகாப்புத் துறையில் நவீன அறிவியல் தொழிநுட்பத்திற்கான அவசியத்தை உணா்ந்து ராணுவத்தை, ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ள ராஜ்நாத் சிங் பாராட்டுக்குரியவா். அவரது தலைமையில் இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் ஆதரவை நாடியது பாகிஸ்தான். “இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேசித் தீா்த்துக்கொள்ள வேண்டும். இதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை” என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அறிவித்தாா்.
உலகமே உற்றுநோக்கும் பெரும் செயலில் பாதுகாப்புத் துறையும் ராணுவமும் ஈடுபட்டிருக்கும் நிலையில் மக்கள் உணா்ச்சிவசப்படுதல் எளிதானது. நாட்டின் எந்தப் பகுதியிலும் பதற்றம் ஏற்படாமலும் அமைதி நிலவும் வகையிலும் பாா்த்துக்கொள்வது சுலபமன்று. அதைச் சாத்தியமாக்கியது உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பொறுப்புணா்வு.
பிரதமரின் செய்தி, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீா், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகிய இரண்டைத் தவிர பாகிஸ்தானிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தரப்பட்ட பதிலடிகள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மட்டுமே. இந்தத் தாக்குதல்களுக்கே அண்டை நாடுகள் அதிா்ந்துபோயிருக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போா் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்தத் தாக்குதல்கள் போா் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.

