
ஜப்பானில் ஆண்டுதோறும் நூறு வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.
அந்த நாட்டில் 1963-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 153 நபர்கள் நூறு வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்த நிலையில், அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. நூறு வயதைக் கடந்தவர்களில் 88% பேர் பெண்கள் ஆவர்.
1950-ஆம் ஆண்டில் உலகில் 47-48 ஆண்டுகள் மனிதர்களின் சராசரி ஆயுள் காலமாக இருந்தது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தற்போது அது 73 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. உலக அளவில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வாழும் நாடுகளில் முதல் மூன்று இடங்களில் ஜப்பான், அமெரிக்கா, சீனா ஆகியவை உள்ளன. நான்காவது இடத்தை இந்தியா (37,988 நபர்கள்) பெற்றுள்ளது. சுமார் 147 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் இது மிக மிக சொற்ப எண்ணிக்கையே.
உலகில் மனிதர்கள் சராசரி ஆயுள் காலத்துக்கும் மேலாக ஆரோக்கியத்துடன் வாழும் நிலப் பரப்புகள் நீல மண்டலங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒகினாவா (ஜப்பான்), சர்டினியா (இத்தாலி), லோமாலிண்டா (கலிபோர்னியா), நிக்கோயா (கோஸ்டாரிகா) மற்றும் இகாரியா (கிரீஸ்) ஆகியவை தற்போதைய நீல மண்டலப் பகுதிகளாகும். இதுபோன்ற பகுதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருக வேண்டும்.
நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழும் ஜப்பானியர்கள் மிகக் கடின உழைப்பாளிகளாக உள்ளனர். தங்கள் உணவில் மீன், காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
இவர்களின் உணவில் உப்பு, சர்க்கரையின் பயன்பாடு மிகக் குறைவே. உணவு உண்ணும் போது இயன்றவரை குடும்பத்தாருடன் தரையில் அமர்ந்து உண்பது, உணவு உண்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றனர். உண்ணும் போது கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றால் உண்டாகும் கவனச் சிதறல்களைத் தவிர்ப்பது ஜப்பானியர்களின் பழக்கமாகும்.
தற்போதும் அருகிலுள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்குச் செல்ல நடந்து செல்வதற்கும், மிதிவண்டியில் செல்வதற்கும் முன்னுரிமை தருகின்றனர்.
முதியோரை முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் தங்களோடு வைத்து பராமரிக்கும் ஜப்பானியரின் குடும்ப முறையும் அந்நாட்டில் முதியோர் நீண்ட காலம் வாழ உதவுகிறது. ஜப்பான் நாட்டின் மாசு குறைந்த சூழல் ஜப்பானியரின் நீண்ட ஆயுளுக்கு உதவும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. இவற்றுக்கும் மேலாக, நீண்ட ஆயுளுக்கும் பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் டிஎன்ஏ 5178 மற்றும் என்2-237மெட் ஆகியன இயல்பாகவே ஜப்பானியர்கள் ரத்தத்தில் சற்றே மிகுந்திருப்பது அவர்களுக்கு இயற்கை தந்த வரம் ஆகும்.
அவசர கதியே வாழ்க்கை என்று அமைந்துவிட்ட சூழலில், நம்மில் பலர் வாய் விட்டு சிரிப்பதையே மறந்து விட்டோம் என்பதே எதார்த்தம். "நிற்கவும் நேரமில்லை...', "ஓடிக்கொண்டே இருக்கிறேன்...' எனக் கூறியபடி எப்போதும் பரபரப்பாக வாழ்வோர் ஒருபுறம். கைப்பேசி பயன்பாட்டில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி நேரத்தை வீணடிப்போர் மறுபுறம். இவ்விரு தரப்பினருமே ஆயுள் வளர்த்து அதிக ஆண்டுகள் வாழ்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
நம் நாட்டின் 60 வயதைக் கடந்த முதியோரில் பலர் பணத் தேவைக்கான நிர்ப்பந்தம் இருந்தாலன்றி உழைப்பதற்கும், தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கும் முன்வருவதில்லை. குறிப்பாக, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றோரில் பெரும்பாலானோர் மீண்டும் தங்களுக்கு உகந்த பணியைத் தேர்ந்தெடுத்து உழைக்க முன்வருவதில்லை. உடலுழைப்பில்லா இத்தகையவர்களே நாளடைவில் அதிகப்படியான முதுமையடைந்து முதுமைக் கால நோய்களால் துன்பப்படுகிறார்கள்.
ஆயுள் வளர்க்கும் அரிய வழிகளில், முதுமைக் காலத்தில் நிறைவேற்றிக் கொள்ளத்தக்க ஆசைகளை அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போதே நிறைவேற்றிக் கொள்வதும் ஒன்றாகும். இவ்வாறு முதுமையில் நிறைவேற்றப்படும் ஆசைகளால் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியின் தாக்கம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடி என்ற பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, தனது மகனைக் காண துபைக்குச் சென்றார். அங்கு "பாரா கிளைடிங்' செய்யும் அவரது விருப்பத்துக்கு அவர் மகன் ஏற்பாடு செய்ய, சுமார் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து தனது ஆசையை நிறைவேற்றி கொண்டதோடு, அதிக வயதான நிலையில் "பாரா கிளைடிங்' செய்த பெண் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் அந்த மூதாட்டி.
தனிமையில் வாழும் எண்ணற்ற முதியோர் நோயின்றி நீண்ட காலம் வாழ்வது சவாலானது என்பதில் ஐயமில்லை; எவரிடமும் தம் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இயலாத தனிமையில் உள்ளவர்கள், மன அழுத்தத்துக்கு உள்ளாவதோடு, அதன் விளைவாக உடல் சார்ந்த உபாதைகளும் உண்டாகி அவர்களது ஆயுளும் குறைகிறது.
"மற்றவர்களுடன் நன்றாகப் பழகுபவர்கள் மற்றும் அன்பான உறவைக் கொண்டவர்கள் அப்படி இல்லாதவர்களைவிட நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றனர்' என்கிறார் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் மனநலப் பேராசிரியர் ராபர்ட் வால்டிங்கர்.
பிறர்மேல் நாம் காட்டும் அன்பு நமது மன நலனையும், உடல் நலனையும் மேம்படுத்துவத்துடன் ஆயுளையும் அதிகரிக்கும். எனவே, சக மனிதர்கள் மீது அன்பை விதைப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.