தடம் புரளும் தலைமைப் பண்பு!

திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அடிமைகளாக ஏன் இருக்க வேண்டும்? என்பதைப் பற்றி...
தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.
Published on
Updated on
3 min read

இளைஞர்களின் ஆற்றல் தேசத்தின் சொத்து. அவர்களின் செயல்பாடுகள் அவரவர் குடும்பம் மட்டுமல்ல இந்த தேசத்தின் நிலையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டவை. இளைஞர்கள் ஆர்வமும் உற்சாகமும் கொண்டு உழைக்க வேண்டிய பருவத்தில் இருப்பவர்கள். இன்றைய செயல்பாடுகள் நாளைய வாழ்க்கைக்கான அடித்தளமாக அமையும்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மக்கள் தாங்கள் விரும்பும் திரை நட்சத்திரத்தை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடினர். கட்டுக்கடங்காத கூட்டம். விஜய் வருவதில் தாமதம், குடிநீர், உணவு, கழிப்பறை என அடிப்படைத் தேவைகள் ஏதுமற்ற இடத்தில் காலை முதல் மாலை வரை நகரவும் இடம் இல்லாமல் மக்கள் காத்திருந்திருக்கின்றனர்.

சுவாசக் குறைபாடு, காற்றோட்டமின்மை, கடுமையான வெயில் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் உண்டு. ஏறத்தாழ அனைவருமே இளைஞர்கள். ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்துக்கு குழந்தைகள் அவசியமற்றவர்கள். வாக்குரிமை பெறும் வயதைக்கூட எட்டாதவர்களுக்கு அரசியல் கட்சிக் கூட்டத்தில் என்ன வேலை? ஆக, கூடிய கூட்டம் அரசியல் தலைவரின் உரையைக் கேட்க வந்தவர்கள் என்பதைவிட நடிகரைக் காண வந்தவர்கள் என்பது உறுதி. இந்தக் கருத்தை நீதிமன்றத்தில் நீதியரசரும் கூறியிருக்கிறார்.

பல்லாயிரம் கோடி பணமும் வசதியும் படைத்தவர்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் தங்கள் வசதிக்கேற்ப வருகிறார்கள். ஆனால், அவரைக் காண நாளெல்லாம் கொளுத்தும் வெயில், மழை என்று பாராமல் காத்திருக்கும் இளைஞர்கள் இதனால் அடையப் போவது யாது? உயிரிழந்த குழந்தைகள் இளைஞர்களின் குடும்பத்தினருக்குப் பணம் தருவதால் இழந்ததைப் பெற முடியுமா? உயிர் மீண்டு வருமா?

திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக நாம் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அடிமைகளாக ஏன் இருக்க வேண்டும்? போதைப் பழக்கம்போல் இதுவும் என்று தோன்றுகிறது. உச்சபட்ச நட்சத்திரமாக ஜொலித்து பல நூறு கோடிகளை சம்பாதிப்பவர்கள் தங்கள் ரசிகர்களால்தான் நட்சத்திர அந்தஸ்து பெறுகிறார்கள்.

அப்படி உயர்நிலை அடைந்தவர்கள் தங்கள் ரசிகர்களின் குடும்பங்களுக்கு இதுவரை செய்திருப்பது என்ன?

ரசிகர்கள் ஒழுக்கம், குடும்பம் என்று பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு பெற்றோரை உடன்பிறந்தவர்களை அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முயற்சித்திருக்கிறார்களா? அவர்களைப் பொருத்தவரை

ரசிகர் பட்டாளம் என்பது அவர்களின் ஊதியத்தை உயர்த்திக் கொள்வதற்கான காரணம். இளைஞர்கள் இப்படி திரைப்பட மோகத்தில் திரையில் காண்பதை உண்மை என்று எண்ணி உணர்ச்சிவயப்படும் நிலைக்கு யார் காரணம்?

பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் திரைப்படம் பார்க்க வேண்டுமானால்கூட பெற்றோரின் தயவு தேவைப்படும் எனில், பெற்றோர் ஏன் இப்படி திரைப்பட நடிகர்களைக் கண்டு பிள்ளைகள் தடுமாறுவதற்கு இடம் கொடுக்கிறார்கள்?

தமிழ்நாட்டில், தொட்டதற்கெல்லாம் தமிழ், தமிழர், தமிழர்கள் சிறப்பான பாரம்பரியம் கொண்டவர்கள் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம்; உணர்ச்சிவயப்படுகிறோம். திரைப்பட நடிகரைப் பார்ப்பதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டும் நாம் என்றேனும் பெருமைமிகு தமிழர்களாக நம் தமிழ் அறிஞர்களைக் காண இப்படிக் கூடியிருக்கிறோமா? அவர்களைக் கொண்டாடியிருக்கிறோமா?

குளிரூட்டப்பட்ட வாகனத்தை விட்டு இறங்காத, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு காணொலிகளை வெளியிட்டுப் பேசிக்கொண்டிருப்பவரை, ஊடகங்களை- பத்திரிகை

களைச் சந்திக்க மறுக்கும் ஒருவரைத் தலைவர் என்று ஏற்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தொண்டர்களாய் இருப்பதில் தவறில்லை. எத்தகைய தலைவர்களுக்கு நாம் தொண்டர்களாய் இருக்கிறோம் என்பதுதான் கேள்வி. ரசிகர்களின் கண்மூடித்தனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு கடப்பவர் தலைவருமல்ல; தான்தோன்றித்தனமாக அடங்காமல் ஆடுவோர் தொண்டர்களுமல்ல.

அரசியல் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்; மக்கள் நலன் சார்ந்து தன்னிடம் இருப்பதையும் மக்களுக்கு அர்ப்பணிப்பவராக தலைவர்கள் இருக்க வேண்டும். தன் பாதுகாப்பைக் காட்டிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்பவரே தலைவர்.

சென்னையில் ஹிந்தி பிரசார சபையில் மகாத்மா காந்தி தங்கி இருந்தார். அரங்கிற்கு வெளியே நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஏறத்தாழ 30,000 பேர் கூடியிருந்தனர்.

மேடைக்கு காந்தி வந்தவுடன், காந்திக்கு ஜே! காந்திக்கு ஜே! என்று பெரும் முழக்கங்களும், ஆரவாரங்களும் எழுந்தன. வரவேற்புரை நிகழ்த்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் காத்துக் கொண்டிருந்தார்.

ஆரவாரத்தைக் கண்ட மகாத்மா எழுந்து மக்களைப் பார்த்துக் கைகூப்பினார். தனது சுட்டுவிரலை உதடுகளில் வைத்து "அமைதி அமைதி அமைதி' என்று மூன்று முறை கூறினார். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதைப்போல் கூடியிருந்த மக்கள் அனைவரும் தரையில் அமர்ந்தார்கள். அமைதி நிலவியது. கூட்டம் நிறைவாக அமைந்தது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாகவே மக்கள் கருதினர். முதுகுளத்தூரில் மூண்ட கலவரம் காரணமாக இமானுவேல் சேகரன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முதல் குற்றவாளியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சேர்க்கப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கிருஷ்ணசாமி ரெட்டியார் நியமிக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணை தொடங்கும் நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்கூடிவிட்டனர். "பசும்பொன் தேவரை விடுதலை செய்' என்று பலத்த முழக்கம் அந்த இடத்தை கிடுகிடுக்க வைத்தது. தகவல் அறிந்த தேவர் வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேசினார்.

"நான் வணங்கும் மனித தெய்வங்களே! நீதிமன்ற வளாகத்தின் முன் எவரும் நிற்கக் கூடாது. அனைவரும் அவரவர் வீடு செல்ல வேண்டும்; நான் இங்கு தனியாக இருக்கவில்லை; என்னோடு இறைவன் முருகன் இருக்கிறான்- கவலைப்படாதீர்கள்.

அரசு வழக்குரைஞர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தன் கடமையைச் செய்யவே வந்திருக்கிறார். அவர் சட்டப்படி வாதிடுவார். அவரைத் தவறாக நினைத்து அவருக்கு எதிராக ஏதாவது ஊறு ஏற்பட்டால் அது அடியேனுக்கு இழைக்கப்பட்ட தீங்காகக் கருதுவேன். இது என் எச்சரிக்கை. அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள்' என்றார். கூட்டம் அமைதியாகக் கலைந்து சென்றது.

கர்மவீரர் காமராஜர் மக்களின் மனம் கவர்ந்த தலைவர். மதுரை தமுக்கம் மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் காமராஜர் தலைமையில் ஏற்பாடாகியிருந்தது. அப்போதைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் பேச இருக்கிறார். கட்டுக்கடங்காத பெருங்கூட்டம்.

மக்கள் ஆரவாரம், "நேருஜிக்கு ஜே! காமராஜருக்கு ஜே!' என முழக்கங்கள். பிரதமர் நேரு பேசக் காத்திருந்தார். பெருந்தலைவர் எழுந்து, "சகோதரர்களே! சகோதரிகளே! நமது தலைவர், நமது பிரதமர் நேருஜி பேசப்போகிறார். எல்லோரும் உட்காருங்கள் ! உட்காருங்கள்' என்கிறார். எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். அமைதியாக இருங்கள் என்றார். அமைதியாக மக்கள் நேருவின் பேச்சைக் கேட்டார்கள். தலைவர்களும் தொண்டர்களும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

மகாத்மா காந்தி "அஹிம்சை' என்ற உன்னத நோக்கத்தோடு தேசத்துக்காக வாழ்ந்தார். காமராஜர் கர்மவீரர்; தனக்கென வாழாது மக்களுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர். முத்துராமலிங்கத் தேவர் தெய்வத் திருமகனாக இந்த மண்ணில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பற்றியிருந்தார்.

இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். மக்களுக்கான மகத்தான தலைவர்கள். உண்மையான தலைவர் மக்கள் திரளைக் கூட்டும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்; அந்த மக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவராகவும் இருக்க வேண்டும்; மக்களுக்காக எவ்விதத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருப்பவரே தலைவர்.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com